பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்பழனி நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா நேற்று மாலை கொளத்தூர் தொகுதி வேட்பாளரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
தற்போது ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையை கொடுப்பதற்குகூட மோடி ஆட்சி தயாராக இல்லை. இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு மோடியிடம் எந்த கொள்கையும் இல்லை. மோடி சொன்ன கணக்கின்படி 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி இருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதை ஒன்றிய பாஜ அரசிடம் இளைஞர்கள் கேட்கவேண்டும். மோடி ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சி. அது பெரும் முதலாளிகளின் ஆட்சி. அப்படிப்பட்ட ஒரு நிலையை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு பாஜ கட்சி முயற்சி செய்கிறது.
மக்களை பிளவுபடுத்த வேண்டும், மோதல் நிலைக்கு கொண்டு செல்லவேண்டும், தமிழ்நாடு கலவர பூமியாக மாறவேண்டும் என்று பிஜேபி முயற்சி செய்கிறது. அந்த முயற்சிக்கு துணை போகிற ஒரு கட்சியாக தான் எடப்பாடியின் கட்சி இருக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதை முறியடித்து ஒரு நல்லாட்சி தொடர்வதற்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு தொடரவேண்டும். தமிழ்நாட்டின் நலன் காப்பாற்றப்பட தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறவேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்த நாடே வியக்கத்தக்க வகையில் கொளத்தூர் மக்கள் ஸ்டாலினுக்கு வாக்களித்து வரலாற்றில் கொளத்தூர் தொகுதியை இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.
