திருப்பூர் ரோடு ஷோ பாதியில் ரத்து: விஜய் ஓட்டம்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு, வேனில் சிக்கி மயங்கி விழுந்த மூதாட்டி, நகை, செல்போன் திருட்டு

* நெரிசலில் கதறிய குழந்தைகள்: 20க்கும் மேற்பட்டோர் மயக்கம்

திருப்பூர்: திருப்பூரில் ரோடுஷோவை ரத்து செய்துவிட்டு விஜய் பாதியில் ஓட்டம் பிடித்தார். நெரிசலில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். தவெக தலைவர் விஜய் நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பகல் 1.30 மணிக்கு கோவை வந்தார். பின்னர், அங்கிருந்து வேனில் அவிநாசி புறப்பட்டார்.

அப்போது வெளியே கூடி இருந்த ரசிகர்கள் அவரது வாகனத்தின் பின்னால் முன்னும், பின்னும் திரண்டு ஓடினர்.  விமான நிலையத்தில் இருந்து விஜய் வேன் அவிநாசி ரோட்டை கடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். கணியூர் சோதனைச்சாவடி அருகே சென்றபோது ரசிகர்கள், தொண்டர்கள் விஜய்யை பார்க்க முண்டி அடித்து வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் கோவை டாடாபாத்தை சேர்ந்த சுதாமணி (38) என்ற பெண்ணின் 5 பவுன் நகை பறிபோனது.

அந்த பெண் அழுது கொண்டே அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, விஜய்யின் வாகனத்தை ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் சேலம்-கொச்சி பைபாஸ் சாலையின் இருபுறங்களில் ரசிகர்கள் வாகனங்களில் சென்று போக்குவரத்து இடையூறு செய்தனர். இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மாலை 3 மணிக்கு அவிநாசி கூட்டத்தில் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் காரணமாக 3.50 மணிக்கு விஜய் அவிநாசி சென்றார்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அங்கு திரண்டவர்கள் அங்கும், இங்கும் ஓடினர். இக்கூட்டத்தில் பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை தவறவிட்டனர். குழந்தைகளை காணவில்லை என கூறி அவர்கள் அந்த பகுதியில் தேடி அழைந்தனர். பின்னர் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவிநாசி ரவுண்டானா பகுதியில் விஜய்க்கு பரிசளிக்க பெண் ஒருவர், காத்திருந்தார். இதை வீடியோ எடுக்குமாறு வாலிபர் ஒருவரிடம் கூறி செல்போனை கொடுத்துள்ளார்.

ஆனால், விஜய் வந்த போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் செல்போனை கொடுத்த வாலிபரை் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின், நேரம் தாமதமானதால் விஜய் அவிநாசியில் பேசவில்லை. பின்னர். ரோடு ஷோ மட்டும் சென்றார். பின்னர், அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்ட விஜய், 4.45 மணிக்கு பெருமாநல்லூர் சென்றார். பிரசாரம் நடைபெறும் பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

பிரசாரம் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் மீது ரசிகர்கள் ஏறாமல் இருக்க தகர சீட்டுகள் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. ரோடு ஷோ செல்வதற்கு ஏற்ற வகையில் சாலையின் இரு புறங்களிலும் பேரி கார்டுகள் வைத்து தொண்டர்கள் உள்ளே நுழையாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் விஜய்யை வசைபாடியபடி சென்றனர்.

இந்த நிலையில், 4.45 மணிக்கு பெருமாநல்லூர் சென்ற விஜய், அங்கு 15 நிமிடம் மட்டுமே பேசினார். விஜய்யை பார்க்க பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வெயிலில் நின்றிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் அழத்தொடங்கினர். இதனால் பெற்றோர்கள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கூட்டம் காரணமாக அவர்களுக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது.

பலர் திறந்த வெளியில் கடும் வெயிலில் நின்றதால் நீர்ச்சத்து குறைய குறைய பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்சுகள் மற்றும் வாகனங்கள் முலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் வசதி கூட ஏற்படுத்தி தராததால் இந்த நிலை ஏற்பட்டது. நேற்று மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள் என 20 பேர் மயக்கமடைந்தனர்.

சுதாரித்து கொண்ட விஜய் திடீரென திருப்பூர் ரோடு ஷோவை ரத்து செய்து விட்டு அங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்றார். இதனால், பெருமாநல்லூரில் இருந்து சிறுபுலுவம்பட்டி வரை சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு கால் கடுக்க வெயிலில் காத்திருந்த மக்கள், பெரும் அதிருப்தி அடைந்தனர். அவிநாசி வழியாக கோவை விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்த விஜய், 7.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் அவிநாசியில் நடந்த விஜய் கூட்டத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் வந்தனர். ஆனால், விஜய் பாதியிலேயே கூட்டத்தை ரத்து செய்து விட்டு புறப்பட்டது கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

* தவெக வேட்பாளரும் மயங்கினார்
தவெக சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன் விஜய்க்கு வரவேற்பு அளிக்க கணியூர் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்தார். அவர், சுமார் ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருந்த நிலையில், விஜய் அந்த பகுதிக்கு வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கினார். நீண்ட நேரம் சாலையில் காத்திருந்த காரணத்தினால் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அங்கிருந்த விஜய் ரசிகர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீர் தெளித்தும், காற்று விசிறியும் முதலுதவி செய்து உட்கார வைத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு சுகுமார் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.

* 5 ஆம்புலன்சுகள் சிக்கி தவிப்பு
சித்ரா அருகே வாகனத்தில் வந்த விஜய், ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து கொண்டை ரோடு ஷோ நடத்தினார். அவரது வாகனத்தின் முன்பு ரசிகர்கள் பலர் பாய்ந்தனர். விஜய் வருகையையொட்டி போலீசார் ஜி.டி மேம்பாலத்தை மூடினர். தவிர, ரோடு ஷோ செல்லும் பாதையை ஒரு மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைத்தனர். இதனால், அவிநாசி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கியது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பலர் அவதிப்பட்டனர்.

* விஜய் மீது செருப்பு வீச்சு?
பெருமாநல்லூரில் பிரசாரம் முடித்துவிட்டு கோவையை நோக்கி விஜய் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி பகுதியில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து வாகனத்தின் மீது நின்றபடி கையசைத்தார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்து விஜய்யை நோக்கி செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: