அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவரது எண்ணம் பலிக்காது. அவரும், அவருடைய பரிவாரங்களும் திராவிட இயக்கம் குறித்து மிகவும் இழிவாக பேசுகிறார்கள். குறிப்பாக அமித்ஷா திராவிட இயக்கத்தை வேரோடு அழிப்பேன் என்கிறார்.
திராவிட இயக்கத்தின் அடிச்சுவடி அறியாததால் அப்படி பேசுகிறார். வியர்வையும், ரத்தமும் சிந்தி வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். தியாகத்தால் வளர்ந்த திராவிட கோட்டையை ஒரு நாளும் யாராலும் அசைக்க முடியாது. திராவிட இயக்கத்திற்கு அரணாக இருக்க வேண்டியது மதிமுகவின் கடமை. ராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வருவார். அவர் இதுவரை வராததால் அதிருப்தி எதுவும் இல்லை.
அதிமுகவினருக்கு அரசியல் அடிச்சுவடே தெரியவில்லை. டெல்லி ஏகாதிபத்தியம் பல்வேறு வகைகளில் வலைவீசி தமிழ்நாட்டை கைப்பற்ற முனைகிறது. அதனால்தான் இதை டெல்லி ஏகாதிபத்தியத்திற்கும், திராவிட ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறப்போர் என்கிறோம். இந்த போரில் டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கி போகும். நாங்கள் 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
