விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நேற்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பதை முதன் முதலில் முன்மொழிந்தது கீதா முகர்ஜி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவர். இப்பொழுது அவர் நமது நினைவில் வாழ்கிறார். 33 சதவீத இடஒதுக்கீடு இல்லையென்றால் நான் அமைச்சர் பொறுப்புகூட ஏற்க மாட்டேன் என்று சொன்னார்.
பலமுறை நாங்கள் முயன்றபோது இதை தடுத்தது பாஜவும் அதன் கூட்டணியும் தான். இப்போது கூட 33 சதவீதம் அல்ல, அதையும் தாண்டி 50 சதவீதம் என்றாலும் பெண்கள் உரிமையை நிலைநாட்டுகிற இயக்கம் தான் திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி. தொகுதி மறுவரையறை செய்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு பகுதியில் அதிகரித்து மசோதாக்களை நிறைவேற்றலாம் என நினைக்கிறார்கள். முதல்வரும் அதை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார். நாங்களும் கண்டிக்கிறோம்.
வடக்கில் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, தென்பகுதி முழுவதுமே பாஜவிற்கு எதிராக இருப்பதால் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். உலகத்தின் தலைசிறந்த இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏற்படுத்துகிற நெருக்கடி இது. அதன் மீது தொடுக்கிற தாக்குதல் இது. அதை கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள், திமுக அணியில் இருக்கிற அனைவரும் உறுதியாக எதிர்ப்போம். நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்த ஒன்றிய அரசு கூறியது என முதல்வர் கூறியுள்ளார்.
முதல்வர் கூறியதை பொய் என கூறிய நிர்மலா சீதாராமனின் சொல்லுக்கு தான் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் போல் தெரிகிறது. நெல்லுக்கு மட்டுமல்ல. ஏழை, எளியவர்களுக்கு எந்த சலுகையும் கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. பெரும் முதலாளிகளுக்கு அருகில் இருந்து ஆட்சி நடத்துகிறார்கள். ஒன்றிய அரசின் மடியில் பெரும் முதலாளிகள் அமர்ந்திருக்கிறார்கள். ஏழைகளை பற்றி சிந்திக்க அவர்களுக்கு தெரியவில்லை. ஏழை மக்களை கரம் தூக்கி விடுகிற எங்கள் கூட்டணி வெற்றி பெறும். நல்லதோர் பாடத்தை ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் வழங்குவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
