* மகளிர் உரிமைத்தொகை பெரும் உதவியாக இருப்பதாக நெகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டை அம்மூர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் ஆற்காட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கிருந்து கார் மூலம் வேலூர் சென்று இரவு தங்கினார். நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கே.வி.குப்பம் ஜெகஜீவன் ராம் நகரில் நடைபயிற்சி சென்று அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்று கை குலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நேற்று அம்பேத்கர் பிறந்தாளையொட்டி நடைபயிற்சியின்போது அப்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப் படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பஜார் பகுதிக்கு சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்குள்ள டீக்கடைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர் ராஜேஸ்வரி, தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்பியுமான கதிர்ஆனந்த் ஆகியோருடன் அமர்ந்து டீ குடித்தார்.
கே.வி.குப்பம் ஜெகஜீவன் ராம் நகரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டிற்குள் முதல்வர் சென்றார். முதல்வர் ஸ்டாலினை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். முதல்வரை வரவேற்று தண்ணீர் கொடுத்தனர். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் ஷீலா என்ற பெண்மணி ‘குடிசை வீட்டில் இருந்தோம். உங்களால்தான் கலைஞர் இல்லம் திட்டத்தில் வீடு கிடைத்தது. பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சொந்த வீடு என்ற கனவு நிறைவேறி உள்ளது’ எனக்கூறி முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘மகளிர் உரிமை தொகை கிடைக்கிறதா, குழந்தைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுகிறார்களா’ என கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, ‘மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் கிடைத்தது. இது குடும்ப செலவிற்கும், படிப்பு செலவிற்கும் பெரும் உதவியாக உள்ளது. குழந்தைகளும் தினமும் பள்ளியில் தான் காலை உணவு சாப்பிடுகின்றனர்’ என உருக்கத்துடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அப்போது, ‘அழாதீங்கம்மா’ என்று கூறி, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை வைத்து வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார். மேலும் பிள்ளைகளின் பெயர், என்ன படிக்கிறீர்கள், காலை உணவு சாப்பிடுகிறீர்களா என முதல்வர் கேட்டார். அதற்கு சிறுவன், 5ம் வகுப்பு படிப்பதாகவும், சேமியா உணவு சாப்பிட்டதாகவும் தெரிவித்தான்.
அதற்கு முதல்வர், ‘நன்றாக படிக்க வேண்டும். அதற்காகதான் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தேன்’ என தெரிவித்தார். பின்னர், வேலூரில் தங்கியிருக்கு ஓட்டலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். தொடர்ந்து, வேலூர் விருதம்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேட்பாளர்கள் நந்தகுமார், ராஜேஸ்வரி, எம்பி கதிர்ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும்படி முதல்வரிடம் குழந்தையை கொடுத்தனர். அந்த குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்த முதல்வர், அக்குழந்தைக்கு ஆதவன் என பெயர் சூட்டினார்.
* பஸ்சில் ஏறி வாக்கு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
கே.வி.குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சில் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களிடம் விடியல் பயணம் மூலம் பயணம் செய்வது உதவியாக உள்ளதா, உங்களுக்கு அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். அப்போது பெண்கள், ‘பஸ் பயணம் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது’ என்று மகிழ்ச்சியுடன் கூறி முதல்வருக்கு கை கொடுத்து வரவேற்றனர்.
* கடைக்கு சென்று மக்கன்பேடா ருசித்த முதல்வர்
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ‘ராணிப்பேட்டைக்கு நான் வந்திருக்கிறேன். ஆற்காடு சீரகச்சம்பா பிரியாணி, மக்கன் பேடா என நவாப்களின் உணவு வகைகளுக்குப் பெயர் பெற்ற ஆற்காடு அமைந்திருக்கக்கூடிய மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராணிப்பேட்டையில் இரவு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வேலூர் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வழியில் ஆற்காடு வந்ததும் திடீரென காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு கடைக்கு அமைச்சர் காந்தியுடன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கன்பேடா வாங்கி ருசித்து சாப்பிட்டார்.
பின்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஆற்காடு பேமஸ் மக்கன்பேடாவின் சுவை நாக்கிலும் மனதிலும் அகலாமல் ஒட்டிக்கொள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு சேகரித்தேன். வெற்றி பெற்றுவிட்டு மீண்டும் ஆற்காட்டுக்கு வரும்போது சீரகசம்பா பிரியாணியையும் ஒரு பிடி பிடித்துவிடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
