தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் பழ.கருப்பையா நிருபர்களிடம் கோவையில் கூறியதாவது: தமிழ்நாடு மாறுதலை நோக்கி இருக்கிறது. சர்க்கார் பட இயக்குனர் திட்டத்தை தான் விஜய் தனது திட்டங்களாக கூறி வருகிறார். அந்த படத்தில் தான் நான் வில்லன். அரசியலில் இல்லை. விஜய்க்கு நாட்டின் வரலாறு, மக்களின் தேவை, இருப்பவர்கள், இல்லாதவர்கள், நாட்டின் கொள்கை, இடஒதுக்கீடு குறித்து என எதுவும் அவருக்கு தெரியாது. கூலிக்கு ஆள் வைத்து கட்சியை நடத்துகிறார். அவர்களும் சுமாரான ஆட்கள் தான்.
பெண்களுக்கு மாமன் சீர் கொடுப்பேன் என விஜய் கூறுகிறார். இது எல்லாம் சீமான் கூறும் உறவுகள் முறை போல் இருக்கிறது. நான் தான் தமிழ்நாடு என பேசுகிறார். அப்போது வள்ளுவனுக்கு பிறகு நீங்க தானா. இப்படி அசிங்கம் பிடித்த பேச்சுக்களை எல்லாம் பேச கூடாது. அவர் அரசியல் தெரியாதவர். மெச்சூர் அரசியல் வாதியை தான் மக்கள் விரும்புவார்கள். இவரது வேட்பாளர்கள் அனைவரும் முகம் தெரியாதவர்கள்.
விஜயால் ஆட்சிக்கு வர முடியாது. அவர் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கின்றனர். ஆனால், அவருக்கு பேசுவதற்கு எதுவும் இல்லை. இவரை போல் கேவலமான அரசியல் வாதியை நான் பார்த்தது இல்லை. விஜய் தான் தவெக, திமுகவுக்கும் இடையே போட்டி என சொல்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அவருக்கு தெரியும் தனது எதிரி யார்? என்று. ரஜினி நடிகர்கள் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறிய கருத்து சரிதான். எங்கள் காலத்தில் அறிஞர்கள் பின்னால் சென்றோம். இன்றைய இளைஞர்கள் நடிகர்கள் பின்னால் செல்கின்றனர். இவர்களை ஒழுங்குப்படுத்த அறிவாந்த தலைவர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
