விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்க செய்வேன். நச்சு தொழில் சார்ந்த நிறுவனங்களை கொண்டுவர விடமாட்டேன். வீட்டில் ஒருவருக்கு கண்டிப்பாக அரசு வேலை கொடுப்பேன். அரசாங்கம் சார்பில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பேன்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மதுபான கடைகள் மூடப்படும். குடிமகன்களுக்காக மரங்களில் இருந்து இறக்கப்படும் பனம் பால், தென்னம் பால், ஈச்சம் பால் ஆங்காங்கே விற்கப்படும். வேளாண்மை செழிக்க ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை, கழுதை பண்ணை வைக்க விவசாயிகளுக்கு வசதி செய்யப்படும். இவற்றின் பால்களை செறிவூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
கரும்பிலிருந்து பெட்ரோல், சர்க்கரை, வெல்லம் தயாரிப்பேன். கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பேன். நான் ஆட்சிக்கு வந்தால் கடுமையான சட்டங்கள் கொண்டு வருவேன். பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் கூடுகிறது. பாலியல் கொடுமை செய்பவனுக்கு கடுமையான தண்டனை கொடுப்பேன். அந்த துரோகம் செய்தவனுக்கு அவனது பெற்றோர் முன்னால், ‘இந்த மகன் உனக்கு தேவையா’ என்று கேட்டுவிட்டு, அவனை அந்த இடத்தில் சுட்டு கொல்வேன். இவ்வாறு பேசினார்.
‘‘இலவசம் இலவசம் என்று தேர்தல் அறிக்கையிலே கொடுத்து வருகிறார்கள். நானும் வீட்டுக்கு வீடு ஹெலிகாப்டர் வாங்கி தருகிறேன். அனைவருக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வைர நெக்லஸ் கொடுப்பேன். ஹனிமூன் போவதற்கு இலவச வசதிகளை செய்து கொடுப்பேன்’’ என்றார்.
