கோவை ராஜ வீதி தேர்நிலை திடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நிதி ஆயோக் என்ன அறிக்கை தந்திருக்கிறது. இந்தியாவில் 30 மாநிலங்களில் மிகுந்த சிறப்பான தர வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 9.8 சதவீதம் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகம் தான் முதல் ரேங்க்.
இதில் பாஜ கூட பெருமை பட வேண்டும். நம் மாநிலம் வளர்ந்துள்ளது. இது எல்லா கட்சியும் பெருமைப்பட வேண்டும். நம்முடைய ஆட்சி முதல் ரேங்க்கிற்கு கொண்டு வந்துள்ளது. நான் எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக கேட்கிறேன் இந்தி கட்டாயத்தை ஏன் கண்டிக்கவில்லை. இப்போது நாடு முழுவதும் பற்றி எரியும் பிரச்னை அரசியல் சாசன திருத்தம் தான். அரசியல் சாசனத்தை திருத்த கூடாது என நாம் கூறினோம்.
ஆனால், இதை பாஜ ஏற்கவில்லை. தொகுதி மறு வரையறை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தின் 543 தொகுதிகளை 816 ஆக மாற்றினால் பல்வேறு மாற்றங்கள் பிரச்னைகள் ஏற்படும். தொகுதிகளை கூட்டுவதில் வேறுபாடு ஏற்படும். இது பெரும் மோசடி. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை கேட்ட போது அவர் நான் மசோதா தொடர்பாக சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அமித்ஷாவிடம் பேசினேன்.
அவர் தமிழகத்திற்கு பாதிப்பு வராது எனக்கூறியதாக தெரிவித்தார். இது என்ன அடிமைத்தனம். இந்த விசயம் பொம்மலாட்டம் போன்றது. திரைமறைவில் பொம்மையை இயக்குவது அமித்ஷா. இதில் பொம்மை போல் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். பொம்மை வைத்திருக்கும் சூத்ரதாரி அமித்ஷா. இந்த தேர்தல் தமிழகத்திற்கும் டில்லிக்கும் நடக்கும் போட்டி. இதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதில் டில்லி வெல்லாது. அப்படி வென்றால் வடநாட்டில் நடப்பது போல் தான் தமிழகத்தில் நடக்குது. இவ்வாறு அவர் பேசினார்.
