நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி சில ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர் கட்சி நிகழ்ச்சி மற்றும் பரப்புரைக்காக அவ்வப்போது பொதுவெளிக்கு வந்து செல்கிறார். அப்படி அவர் வரும்போது அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் ஈர்க்கும் விதமாகச் சில செயல்களைச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக ரேம்ப் வாக் செல்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.
அப்படி விஜய் செய்வதைப் போன்ற சாயலில் வேறு கட்சித் தலைவர்கள் யாராவது எதாவது செய்தால் தங்களின் தலைவரை அப்படியே பின்பற்றுகிறார்கள் எனத் தவெகவினர் தொடர்ந்து விமர்சித்து வருவதுண்டு. அது இயல்பான ஒன்றாக இருந்தாலும் திட்டமிட்ட ஒன்று என விஜய்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என தவெகவினர் சொல்லிவந்தனர். விஜய் செய்வதற்கு முன்பே சில தலைவர்கள் அவ்வாறு செய்திருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாத தவெகவினர் விஜய்தான் அதைக் கண்டுபிடித்தார்;
மற்றவர்கள் எல்லாம் காப்பி அடிக்கிறார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். விஜய் அரசியலுக்கு வந்தது முதல் செய்யும் அனைத்தும் ஏற்கனவே மற்ற தலைவர்கள் செய்தவைதான் என்பதை விஜய்யின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. ஆனால், தற்போது விஜய்யின் பெரும்பாலான செயல்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
குறிப்பாக, சில நாள்களுக்கு முன்னர் விஜய் பரப்புரைக்குச் சென்றபோது அவருக்கு வில் அம்பு வழங்கப்பட்டது. அதை வைத்துப் போஸ் கொடுத்தார் விஜய். மேலும், கடந்த சில பரப்புரைகளின்போது விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டுவதை பார்க்கமுடிகிறது. இவையெல்லாம் ஏற்கனவே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடைபிடித்த பிரசார பாணிதான்; அதை அப்படியே விஜய் பிரதிபலிக்கிறார்.
குழந்தையை தோளில் தூக்கி வைத்து பிரசாரத்தில் போஸ் கொடுத்தார் விஜய். இதை பவன் கல்யாணம் முன்னாடியே செய்து இருக்கார். இதை பார்த்த நெட்டிசன்கள், நல்லாமே நடிப்பா கோபாலு எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். ஒருபக்கம் விஜய் பவன் கல்யாண் பாணியைப் பின்பற்றினால், தவெகவினர் பவன் கல்யாண் கட்சியினர் பாணியைப் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, விஜய் ஒருநாள் பரப்புரை ஒருநாள் விடுமுறை எனச் செயல்பட்டு வருவதால், எப்படியும் தங்கள் தொகுதிக்கு விஜய் வந்து பரப்புரை செய்யமாட்டார் என்று விரக்தியடைந்த தவெக வேட்பாளர்கள் விஜய்யின் உருவ பொம்மை, விஜய் சாயலில் உள்ள டூப், 3டி தொழில்நுட்பம் என களமிறங்கிவிட்டனர்.
இதை ஏற்கனவே பவன் கல்யாண் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் செய்துவிட்டனர் எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் எல்லாவற்றையும் விஜய் ரீ கிரியேட் செய்வதாகவும், எல்லாமே ஸ்க்ரிப்ட் தான எனக் கேள்வி எழுப்பியும் விமர்சித்து வருகிறார்கள்.
