கரூரில் 41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரித்ததைவிட ஈனமான செயல் இருக்குமா? தவெக தலைவர் விஜய்யை விளாசிய நடிகர் சரத்குமார்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் நேற்று பெரம்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய்யை நான் தவிர்த்தது இல்லை. கட்சி தொடங்கி, முதல்வராக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும். அவரது வயதுக்கு மீறி, அனுபவத்திற்கு மீறி பேசும்போதெல்லாம் அவரை தாக்கி பேசுவது நான் மட்டும்தான். இதற்கு முன்பு பலரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவரது கட்சிக்காரர்கள் நான்கு இடங்களில் நிற்பார் என்று சொன்னது தான் வேடிக்கையாக இருக்கிறது. இலவசத்தை எதிர்ப்பவன் நான் என்று சொன்னவர் இப்போது இலவசம் என்கிறார். கார், பைக் கொடுப்பேன், என்று சொல்கிறார்.

எப்படி கொடுப்பார்? 10 லட்சம் கோடி கடனை சீர் செய்வதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரா? எந்தக் கொள்கை கோட்பாடும் இல்லாமல், எதை எடுத்தாலும் அரசியல் ஆக்குவது தான் அவரது நோக்கமாக இருக்கிறது. 1996ம் ஆண்டில் இருந்து மக்களை நான் சந்தித்து கொண்டு இருக்கிறேன். ஒரு அசம்பாவிதம் கூட நடந்தது கிடையாது. இதைவிட பெரிய பெரிய கூட்டம் எல்லாம் பார்த்தாச்சு. ஒரு அசம்பாவிதம் கூட நடக்காது. 41 இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து யாராவது துக்கம் விசாரிப்பார்களா? இதைவிட ஈனமான செயல் இருக்குமா? எதற்காக லீவ் விடுகிறார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். முதல்முறையாக மக்களை சந்திக்க எல்லா ஊர்களுக்கும் செல்வதனால் டயர்ட் ஆகியிருக்கலாம். மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதை சொல்லாமலேயே வாக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: