சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் அருள் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திடீரென மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக நிர்வாகிகளும் தொண்டர்களும் தாங்கிப் பிடித்து, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. கோடை வெயில் காரணமாகவும் அதிக அலைச்சல் காரணமாகவும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சற்று உடல் நலம் தேறிய நிலையில் ராமதாசை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் சேலத்திலிருந்து காரில் புறப்பட்ட ராமதாஸ், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையை வந்தடைந்தார். அவருடன் பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் இருந்தனர். தற்போது அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
