பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மதுபோதையில் தள்ளாடியபடி தவெக தொண்டர் வாக்கு சேகரிப்பு: அவதூறு பிரசாரம் வீடியோ வைரல்; பொதுமக்கள் கண்டனம்

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மதுபோதையில் தள்ளாடியபடி தவெக தொண்டர் வாக்கு சேகரித்து அவதூறாக பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யின் தவெக கட்சி சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு விஜய் வரும்போது செய்யும் பல்வேறு அலப்பறைகள் சமூக வலைதளங்கலில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முண்டியடித்துக் கொண்டு பிரசார வாகனத்தில் ஏறுவது, அவர்களை விஜய்யின் பாதுகாவலர் ஷீ காலால் எட்டி உதைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒரு தலைவன் முதலில் தனது தொண்டர்களை முறையாக வழிநடத்த வேண்டும். அவர்களுக்கு ஒழுக்கத்தையும் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்வது என்பதையும் கற்றுத் தர வேண்டும். அதன் பிறகு அவர் நாட்டை ஆள வரட்டும் என மிகவும் காட்டமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் செய்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கையில் கட்சி கொடியும், தோளில் கட்சி துண்டை போட்டுக்கொண்டு மதுபோதையில் அந்த நபர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் பகுதியில், பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சேகர் குறித்து அவதூறாக பேசி வாக்கு சேகரிக்கிறார்.

அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் சிலர், அவரிடம் பேசும் போது அவர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார். குடிபோதையில் பேசும் நபர் அருகிலேயே குழந்தைகள் சைக்கிள் ஓட்டிக் கொண்டும் விளையாடிக் கொண்டு உள்ளதை பார்த்தும் தொடர்ந்து அதே பாணியில் பேசுகிறார். குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை கூட யோசிக்காமல் அந்த நபர் திமுக வேட்பாளர் குறித்து அவதூறாக பேசுவதை இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் நீங்கள் குடிக்கவில்லையா என இளைஞர்கள் கேட்டதற்கு ஆமாம் நான் குடித்துவிட்டு தான் பிரசாரம் செய்கிறேன் என அந்த நபர் கூறுகிறார்.

இவ்வாறு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் தவெக தொண்டர்கள் மது போதையில் தங்களது வேட்பாளர் விஜய்க்கு வாக்கு சேகரித்து வருவது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. தற்போது பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக நிர்வாகி மது போதையில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இவர்கள் தான் புதிய மாற்றத்தை உருவாக்க போகிறார்களா? முதலில் ஒரு தலைவன் தொண்டர்களை முறையாக வழிநடத்த வேண்டும். வாகனங்கள் பின்னால் வராதீர்கள் என்று கட்சி மூத்தவர்கள் கூறுவதை கூட தொண்டர்கள் கேட்க மறுக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னாகும் என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள், என தங்களது ஆதங்கத்தை நெட்டிசன்கள் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

Related Stories: