தெளிவு பெறு ஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

?எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்திருக்கும்போது, கோயிலுக்குச் சென்று வழிபடுவது எதற்காக? ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதால் நமக்குக் கிடைக்கும் சிறப்பான பலன் என்ன?

-  வி.பார்த்திபன், பரமக்குடி.

பாலில் நெய் மறைந்திருப்பதைப் போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவதைப் போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதனாலும், துதிப்பதனாலும், வழிபடுவதனாலும் வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

‘கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்து சாம்பலாகாது, சூரிய காந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழே வரும் வெயிலுக்கு உண்டு. பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழே உள்ள இடத்திற்குச் சூரியகாந்தக் கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது, வெயிலில் வேட்டியைக் காயவைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் இறைவனை வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

‘‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே’’

 - என்பது சிவஞான போதம்.

நமது திருக்கோயில்களில், உள்ள திருஉருவங்கள் தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப்பட்டு துதிக்கப்பட்ட காரணத்தால் தீயதை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற நாம் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

?சப்த ரிஷிகளும் பூஜித்த ஆலயங்கள் இருக்கின்றனவா? அவை எங்கெங்கு உள்ளன? விளக்குங்களேள்!

-  சுந்தர மூர்த்தி, திருச்சி.

சப்தரிஷிகள் ஒன்றுகூடி தமது ஆத்மசக்தி மேம்படவும், உலகம் நலம் பெறவும், அசுரர்களை அழிக்கவும் பூமிக்கு வந்து சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்துள்ளனர். அத்தலங்கள் அவர்கள் பெயரால் சப்த ரிஷீஸ்வரங்கள் அல்லது சப்த ரிஷீஸ்சுவரங்கள் என்றழைக்கப்படுகின்றன. காஞ்சிபுரம், லால்குடி, ஒடுக்கத்தூர், காசி முதலான தலங்களில் சப்தரிஷீசுவரர் ஆலயங்களைக் காணலாம். இவற்றைப் பற்றிய சிறுகுறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

லால்குடி திருத்தவத்துறை

திருத்தவத்துறை என்று புராணங்களிலும் நடைமுறையில் லால்குடி என்றும் அழைக்கப்படும் தலத்தில் சப்தரிஷிகள் கூடி வழிபட்ட சப்தரிஷீஸ்வரர்  ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்பிகையின் பெயர் பெருந்திருப்பிராட்டி என்பதாகும். லால் என்பதற்கு உருதுமொழியில் சிவப்பு என்பது பொருள். சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட கோயிலாக இருந்ததால் லால்குடி என அழைத்தனர் என்பர்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தழற்பொறியாகத் தோன்றிய முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் திருவுருவம் தாங்கினார். சப்தரிஷிகள் தமது மனைவியரிடம் அந்தக் குழந்தைகளுக்குப் பாலூட்டும்படிக் கூறினர். வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அதற்கு உடன்படவில்லை அதையடுத்து அறுவரின் மனைவியரும் மறுத்துவிட்டனர். முனிவர்கள் கார்த்திகைப் பெண்களைப் பாலூட்டுமாறு செய்தனர்.

பின்னர் பாலூட்ட மறுத்த தம் மனைவியரைச் சபித்தனர். அதையறிந்த முருகப் பெருமான் ஏழு முனிவர்களையும் கோபித்தார். அவருடைய கோபத்தால் வருந்திய முனிவர்கள் மண்ணுலகில் வந்து காவிரிக் கரையில் அமைந்த இத்தலத்தில் வழிபாடு செய்து மேன்மை பெற்றனர். சப்தரிஷிகள் கூடி வழிபட்டதால் இத்தலத்து இறைவர் சப்தரிஷீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இவ்வூர் அம்பிகை மீது பாடப்பட்டுள்ள பிள்ளைத் தமிழில் ஏழு இருடிக்கிறை என்று குறிக்கப்பட்டுள்ளார்.

இத்தலத்தில் தனிச்சந்நிதியில் ஒரே வரிசையில் ஏழு முனிவர்களும் எழுந்தருளியுள்ளனர். இத்தலத்திலுள்ள தேரில் ஏழு முனிவர்கள் கோயிலில் வழிபடும் காட்சியும் இத்தலத்தில் திருப்பணி செய்த மன்னனின் திருவுருவமும் இடம் பெற்றுள்ள மரப்பலகைச் சிற்பம் உள்ளது.

ஒடுக்கத்தூர் சப்தரிஷீசுவரர்

வேலூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் ஒடுக்கத்தூர் என்னும் தலம் உள்ளது. ரிஷிகள் மனத்தை ஒடுக்கி நெடுங்காலம் யோக நிலையில் வீற்றிருந்ததால் இத்தலம் ஒடுக்கத்தூர் ஆன தென்பர். உடுக்கள் என்றால் நட்சத்திரங்கள் உடுக்களில் மேன்மை பெற்ற நட்சத்திரங்களாக விளங்கும் சப்தரிஷிகள் தங்கி வழிபட்டுப் பேறு பெற்றால் உடுக்கத்தூர் என்று வழங்கி இந்நாளில் ஒடுக்கத்தூர் எனவழங்குகிற தென்பர்.இறைவன் சப்தரிஷீசுவரர், அம்பிகை அபீதகுசாம்பாள்.

காஞ்சியில் சப்தஸ்தானம்

ஒரு சமயம் சப்தரிஷிகளான அத்திரி, குத்ஸன், வசிட்டன், பிருகு, கௌதமர், காசிபர், ஆங்கீரஸ் என்னும் முனிவர்கள் எழுவரும் இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்னே பிரமன் தோன்றினார். அவரிடம் முனிவர்கள் பெறுதற்கரிய முத்தியைப் பெறும் வழியைத் தங்களுக்குக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரம்மன் பலவிதமான தருமங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறிச் சிவலிங்கத்தை உன்னதமான ஒரு தலத்தில் வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும் என்றார். பின்னர் சிவபூசையின் பலனைத் ஒன்றுக்குப் பல மடங்காகத் தரும் தலம் காஞ்சிபுரமாகும்.

அத்தலத்தில் அவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டால் விரைவில் முத்தி பெறலாம் என்றான்.அவர்கள் அவன் கூறியபடியே காஞ்சிக்கு வந்து ஏகாம்பரநாதர் முதலான அநேக தலங்களை வழிபட்டு அந்த நகரின் நடுவில் ஓடும் மஞ்சளாற்றின் (திருமஞ்சன நதி) கரையில் தனித்தனியே லிங்கங்களை அமைத்து வழிபட்டனர். முதன்மை லிங்கத்திற்கு சப்தத்தானேசுவரர் என்பது பெயர். அவரைச் சுற்றித் தனித்தனி இடங்களில் அத்திரீகர், குச்சேசர், வசிட்டேசர் முதலிய லிங்கங்கள் உள்ளன. வசிட்டர் வழிபட்ட சிவலிங்கம் வசிட்டேசுவரர் எனும் பெயரில் உல்ளது. வியாச சாந்தாலீசுவரர் ஆலயத்திற்கு அருகில் வெடித்துக் கூடிய வசிட்டேசுவரர் ஆலயம் உள்ளது.

காசிநகரில் சப்த ரிஷீசுவரர்

 காசி நகரில் ரிஷிகள் பூசித்த எண்ணற்ற தலங்கள் அவரவர் பெயராலேயே உள்ளன. இவற்றில் சிறந்த லிங்கங்களாக சப்தரிஷீ சுவரங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஏழு லிங்கங்களைத் தரிசிப்பதைச் சப்தரிஷி யாத்திரை என்று கூறுகின்றனர். ஒவ்வொரு பஞ்சமியும் சப்தரிஷியாத்திரைக்கு ஏற்ற புண்ணிய நாளாகும்.ஜங்கம்பாடி ரோடில் காஸ்யபேசுவரர், ஆங்கீரசர் ஆலயங்களும்; ஓதை சௌக்கில் அத்ரீசுவரர் ஆலயமும், நாக கூபத்தில் மர்சீசுவரர் ஆலயமும்; ததோ லியாவில் கௌதமேஸ்வரர் ஆலயமும் மணிகர்ணிகை சுவர்க்கத் துவாரத்தில் புலகீசுவரர் ஆலயமும், சங்கடாகாட்டில் வசிட்டேசுவரர் ஆலயமும் உள்ளன.

வசிட்டேசுவரர் ஆலயத்தின் அருகிலேயே அருந்ததி பூசித்த லிங்கம் அருந்ததீசுவரர் எனும் பெயரில் உள்ளது.காசிக் கண்டத்தில் பதினெட்டாவது அத்தியாயத்தில் சப்தரிஷிலோக வர்ணனை சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளது.

திருச்சி - அன்பில்

அன்பில் என்று அழைக்கப்படும் அன்பில் ஆலந்துறையிலுள்ள சத்தியவாகீசுவரர் ஆலயத்தில் சப்தரிஷிகள் வழிபட்டுப் ேபறு பெற்றுள்ளனர். அவர்கள் லிங்கத்தை வழிபடுவது இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை, திருவிடைமருதூர் முதலிய பல தலங்களில் சப்தரிஷிகள் வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

குடந்தை சப்தரிஷீசுவரர்

கோவில் நகரமான கும்பகோணத்தில் சப்த ரிஷிகள் ஆங்காங்கு சிவலிங்கம் அமைத்து வழிபட்டுள்ளனர். அவர்கள் ஒன்றுகூடி வழிபட்ட சிவாலயம் சப்த ரிஷீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது குடந்தைக்குக் கிழக்கே மயிலாடுதுறை சாலையிலுள்ள அம்மா சத்திரத்தில் அமைந்துள்ளது. இறைவன் சப்தரிஷீசுவரர், அம்பிகை வேதநாயகி.

Related Stories: