மிஷன் மஜ்னு (இந்தி)

கடந்த 1974ல் இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தானும் ரகசிய இடத்தில் அணுகுண்டு சோதனை நடத்தி பதிலடி கொடுக்க முயற்சித்ததாக கூறப்பட்டது. ஜியா உல் ஹக் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த சோதனை முயற்சியை அவர் மறுத்தார். இது வரலாற்றுச் செய்தி. பாகிஸ்தானின் அணுகுண்டு சோதனை முயற்சியை இந்திய உளவு அமைப்பான ‘ரா’ கண்டுபிடித்து தடுத்ததாக கூறப்பட்டது. இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு, இந்திய உளவாளிகள் எப்படித் தடுத்தனர் என்பதை கற்பனை கலந்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இந்திய உளவாளி அமன்தீப் (சித்தார்த் மல்ஹோத்ரா), பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் தாரிக் என்ற பெயருடன் இஸ்லாமியராக வாழ்ந்து வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பார்வையற்ற பெண் நஸ்ரினை (ராஷ்மிகா மந்தனா) காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்தி வரும் இடத்தைப் பற்றிய தகவலைச் சேகரித்து அனுப்பும் அசைன்மெண்ட் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. அதை அவர் எவ்வாறு செய்து முடிக்கிறார்? ராஷ்மிகா மந்தனாவின் காதல் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி கதை.

 

பாகிஸ்தான் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பாலிவுட் படங்களில் ஒன்றாக இதை உருவாக்கியுள்ளார், இயக்குனர் சாந்தனு பாக்சி. கற்பனைக் கதையான இதில் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஜியா உல் ஹக் போன்ற நிஜ மனிதர்களையும் இணைத்து, ஒரு போலியான வரலாற்றைச் சித்தரிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும், விறுவிறுப்பான ஸ்பை திரில்லர் படமாக வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணிக்கும் பலஹீனமான திரைக்கதையால் படம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ரயில் சண்டை மட்டுமே விறுவிறுப்பான காட்சி. சித்தார்த் மல்ஹோத்ரா அமன்தீப் கேரக்டரை விட, தாரிக் கேரக்டரில்தான் பொருத்தமாக இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா பார்வையற்ற பெண்ணாக மனதைக் கவர்கிறார்.

பாகிஸ்தான் அதிபர்கள் பூட்டோ, ஜியா உல் ஹக், இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோருக்கான கேரக்டர் தேர்வு கச்சிதம். இதை வரலாற்றுப் படமாக நினைக்காமல், ஆக்‌ஷன் படம் என்ற ரீதியில் பார்த்தால் இரண்டரை மணி நேரம் டைம் பாஸாகும். நெட்பிளிக்சில் நேரடியாக வெளியாகியுள்ள இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.

Related Stories: