பதான்

டாம் குரூசின் ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘டாப்கன்’ ஆகியவற்றுடன் ஜேம்ஸ்பாண்ட் படங்களையும் கலந்து, அவற்றுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கு பக்கா ஆக்‌ஷன் எண்டர்டெயின்மெண்ட் விருந்தை, 4 வருட இடைவெளிக்குப் பிறகு தனது ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார் ஷாருக்கான். ஷாருக்கானும் (பதான்), ஜான் ஆபிரகாமும் (ஜிம்) இந்தியா மீது அதிக விஸ்வாசம் கொண்ட, வீரம் நிறைந்த ‘ரா’ உளவாளிகள். பல மிஷன்களை நாட்டுக்காக வெற்றிகரமாக நடத்தியவர்கள். சில மிஷன்கள் தோல்வியில் முடியும்போது, உளவாளிகளைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது. அவ்வாறு இருவரும் தனித்தனி சம்பவத்தில் கழற்றிவிடப்படுகின்றனர்.

இதில் ஜான் ஆபிரகாமின் கர்ப்பிணி மனைவி கொல்லப்பட்டுவிட, இந்தியாவின் மீது தீராத கோபம் கொண்டு, பிறகு இந்தியாவின் எதிரிகளுடன் கைகோர்த்து, இந்தியாவை பழிக்குப்பழி வாங்க திட்டமிடுகிறார். ஆனால், இந்தியா தன்னைக் கைவிட்டபோதும் தேசப்பற்றுடன் இருக்கும் ஷாருக்கான், எப்படி ஜான் ஆபிரகாமின் சதியைத் தடுக்கிறார் என்பது கதை. இதில் ஐஎஸ்ஐ ஏஜெண்ட் ரூபினா  (தீபிகா படுகோன்) இருவர் பக்கமும் மாறிச்சென்று கவர்ச்சி விருந்தும், ஆக்‌ஷன் விருந்தும் படைக்கிறார்.

 

இந்திய அரசாங்கம் காஷ்மீருக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்கிறது. இது முழு காஷ்மீரையும் கைப்பற்றும் திட்டத்தின் முன்னோடி என்று, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி நினைக்கிறார். அவர் இந்தியாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் பொறுப்பை ஜான் ஆபிரகாமிடம் ஒப்படைக்கிறார். கொரோனா வைரஸ் போல் வேகமாகப் பரவி மக்களை அழிக்கும் வைரஸ் ஒன்றை, விஞ்ஞானிகளை கடத்திச்சென்று கண்டுபிடிக்கும் ஜான் ஆபிரகாம், அதை நாட்டுக்குள் பரப்பி மக்களை அழிக்க நினைக்கிறார். இத்திட்டம் எப்படி முறியடிக்கப்படுகிறது என்பது திரைக்கதை. ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய கதையை, இரண்டரை மணி நேர கிளைமாக்ஸ் ‘மூட்’ படமாக வழங்கி இருக்கிறார், இயக்குனர் சித்தார்த் ஆனந்த்.

 

படத்தின் சில திருப்பங்கள், பல காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவூட்டுகிறது என்றாலும் ரசிக்க வைக்கிறது. ரஷ்யாவில் ‘ரத்தவித்து’ என்ற வைரஸை எடுப்பதற்காக ஷாருக்கானும், தீபிகா படுகோனும் திட்டமிட்டு செயலாற்றும் காட்சி, சல்மான்கான் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கும் ரயில் சண்டைக்காட்சி, ‘டாப்கன்’ பட பாணியிலான விமான சண்டைக்காட்சி உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. நீண்ட தலைமுடி, சிக்ஸ்பேக் பாடி, தீர்க்கமான லுக், ஈர்க்கும் உடல்மொழி என்று, மாஸ் ஹீரோவுக்கான இலக்கணத்தைப் பக்காவாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார், ஷாருக்கான். அவருக்கு நிகரான பங்களிப்புடன் ஜான் ஆபிரகாம் வருகிறார். வில்லத்தனத்தை தவிர எந்த வகையிலும் ஷாருக்கானுடன் அவர் வேறுபடவில்லை. தீபிகா படுகோன் சண்டைக்காட்சியிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை காட்டு... காட்டு என்று காட்டியிருக்கிறார். அவரது முதல் சண்டைக்காட்சியில் தியேட்டர் அலறுகிறது. பக்குவமான உயர் அதிகாரியாக வந்து, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்கிறார் டிம்பிள் கபாடியா.

 ஸ்பெயின், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தனது கேமராவை உயர்த்திப் பிடித்து ஆச்சரியப்படுத்துகிறார், சச்சித் பவுலோஸ். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை தெறிக்கவிடுகிறது. சல்மான்கான், ஷாருக்கான் மோதும் ரயில் சண்டைக்காட்சியை, ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ரசிக்கின்றனர். இறுதி டைட்டில் ஓடும்போது அவர்கள் பேசும் டயலாக் செம மாஸ். லாஜிக் பார்க்காமல் அதிரடி படம் கொடுக்க நினைத்து, அதில் வெற்றி பெற்றுள்ளது படக்குழு. காஷ்மீர் விவகாரம், பயோ வார், சர்வதேச தீவிரவாதம் போன்ற விஷயங்களை மேம்போக்காக சொல்லியிருக்கின்றனர். ஹீரோவும், வில்லனும் தனித்தனியாக ஸ்கோர் செய்தாலும், இருவருக்கும் சந்திக்கும் காட்சியில் ஃபயர் குறைவு. ‘பதான்’, ஷாருக்கான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரக்கூடிய படம்.

Related Stories: