மும்பை: பான்வேர்ல்ட் படமான ‘ராமாயணா: பார்ட் 1’ என்ற படத்தில் மண்டோதரி வேடத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ அம் கேம்’ என்ற படத்திலும், ‘தி இந்தியா ஸ்டோரி’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் (30) என்பவர் தீ வைத்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், தீ வைத்து எரிக்கப் பட்ட ஒரு மனிதனின் உடல் கொண்ட போஸ்டருடன், ‘வங்கதேச இந்துக்கள் மீது அனைவரது பார்வையும் இருக்கிறது. இந்துக்களே விழித்தெழுங்கள். அமைதியாக இருப்பது உங்களை ஒருபோதும் காப்பாற்றாது’ என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா விடுத்துள்ள அறிக்கையில், ‘வங்கதேசத்தில் அப்பாவி திபு சந்திரதாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிக மனவேதனையை அளிக்கிறது. இது ஒரு சாதாரண வன்முறை அல்ல. கொடூரமான படுகொலை. இது இந்து மதத்தின் மீதான தாக்குதல். நம்முடைய கோயில்கள் அழிக்கப்படுகின்றன. பெண்கள் தாக்கப்படுகின்றனர். எவ்வளவு காலம் நாம் அமைதியாகவே இருக்க முடியும்? வங்கதேச சிறுபான்மையினருக்காக குரல் எழுப்பி நாம் உதவி செய்ய வேண்டும். இந்த கொடூரமான சம்பவத்துக்கு உடனடியாக நாம் உரிய நீதியை கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
