பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் காலமானார்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் நெல்லையில் நேற்று அதிகாலை காலமானார். நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வந்தவர் நாட்டுப்புறக் கலைஞர் தங்கராஜ் (63).

இவர் கோயில் திருவிழாக்களில் பெண் வேடமிட்டு கரக ஆட்டம் மற்றும் கனியான்கூத்து ஆடுவது வழக்கம்.

திருவிழா இல்லாத காலங்களில் தோட்டத்தில் காவலாளியாகவும், பகல் நேரத்தில் வாழைக்காய், வாழை இலை, வெள்ளரிக்காய் விற்பனை செய்தும் குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில் 2018ம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் தனுஷ் நடித்த கர்ணன் படத்திலும் நடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பு இன்றி நலிவடைந்து காணப்பட்டார். வண்ணார்பேட்டையில் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். இவருக்கு வீடு கட்டிக் கொடுக்க நெல்லை கலெக்டர் விஷ்ணு நடவடிக்கை எடுத்தார். வீடு கட்டிக் கொடுத்து அந்த வீட்டிற்கான திறப்பு விழாவும் நடந்தது. இந்த வீட்டை கலெக்டர் விஷ்ணு, இயக்குநர் மாரிசெல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் நலிந்த கலைஞர் உதவித்தொகை ₹3 ஆயிரம் மாதம் தோறும் கிடைக்கவும், அவரது மகளுக்கு தற்காலிக அரசு வேலை வழங்கியும் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவி செய்தது. வயது முதிர்வு காரணமாக நெல்லையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் உடல் நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார்.

 அவரது உடல் இறுதி அஞ்சலிக்கான அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தங்கராஜ் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள், பொது நல அமைப்புகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் நெல்லையில் இன்று நடக்கிறது.

Related Stories: