கார்த்திகையில் விரதம் இருக்கும் காவல் தெய்வங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிரபஞ்சத்தில் மனிதன் உருவெடுத்தபோது எதிர்பாராத நிகழ்வுகளை, இயற்கை இடையூறுகளை சந்திக்க முடியாமல் அதைக் கண்டு அஞ்சியவன். அச்சத்தின் காரணமாக அதை வணங்க முன்வந்தான். அதுபோல் கொடும் மிருகங்களையும் வணங்கினான். அதன்பிறகு இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனைக் கைதொழுதான். படிப்படியாக மனிதன் நிலைமாற வழிபட்ட கடவுளின் நிலையையும் அவன் மாற்றினான். ஆம் உருவம் கொடுத்தான். பிறப்புக்குக் காரணமான ஆணைவிட பெற்றெடுப்பது பெண்தான் என்பதால் பெண்கடவுள் சக்தி கொண்டவள் என்பதை அறிந்து பெண்கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழிபடலானான்.

நிலம், ஆறு, கடல் என பலவற்றையும் பெண்ணாக கருதினான். இவ்வாறு உருவான கடவுள் வழிபாடு கோயில்வழிபாடாக மாறியது. திருவிழா காண நேர்ந்தது. அதன் பின் வசதி படைத்தவன், வசதி அற்றவன் என பிரிவு எழுந்தது. அதுவே கோயில் வழிபாடுகளிலும் உருவானது. இதுவே பின்னர் இனப்பிரிவானது. பெருங்கோயில், சிறு கோயில் என உருவானது. இதனிடையே பார்வதி தேவி எடுத்த மாகாளி அவதாரத்திற்கு பின்னர் பூலோகத்தில் மீண்டும் மந்திரசக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது.

இதை கவனித்த தேவர்கள் பிரம்மனிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டனர். அவர்கள் சிவனிடம் கூறினர். ‘‘சுவாமி, மந்திரசக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைத்த உயிர்களை எப்படி காப்பது?’’ என்று கேட்டபோது, ‘மாந்த்ரீக சக்திகளுக்கு முடிவு கட்ட விரைவாக தீர்வு காண்போம்’ என்று கூறிய சிவன், மந்திரமூர்த்தியாக அவதாரம் எடுக்க முடிவுசெய்தார்.

அதன் காரணமாக சிவன், 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார். அவர்கள்தான் சிவனின் இயக்கியவர்களாக (சேவகர்களாக) செயல்பட்டனர். அவர்களே சிறு தெய்வங்களில் முதன்மையானவர்களாக திகழ்ந்தனர். இதுபோல் விதி முடியும் முன்னே தன்னைத்தானே அழித்ததன் பேரில் மாண்டுபோன மனிதர்களின் ஆவிகள் மக்களை அச்சுறுத்தியது. இதனை அறிந்த தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். அந்த ஆவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சுடலை வனத்திற்கு காவலாக வருகிறார்.

இதனால் சுடுகாட்டுப் பித்தன் என்று சிவனுக்கு ஒரு நாமம் உருவானது.மகாவிஷ்ணுவும், சக்தியும் சிவனிடம் வேண்ட, சிவபெருமான் தனது சக்தியின் மூலம் சுடலைமாடன் போன்ற தெய்வங்களை அவதரிக்கச்செய்து அவர்களை சுடுகாட்டுக்கு காவலாய் வைத்தார். சுடலைமாடன், பேச்சி, பிரம்மராட்சி, இசக்கி, தளவாய்மாடன், கரடி மாடன், கொம்பு மாடன், இருளப்பன், கருப்பன், கருப்பண்ணசாமி, தூசி மாடன், மாரியம்மன், முத்தாலம்மன், முண்டன், புதியவன், திருவரங்கச் செல்வி, முனீஸ்வரன், முப்பிடாதி, காந்தாரி, உச்சிமாகாளி, வண்டிமலைச்சி, சந்தனமாரி, முத்தாரம்மன், முத்துமாலையம்மன், குழலியம்மன் ஆகிய தெய்வங் களின் வரிசையில் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த முத்துவீரன், சேர்வராயன், பலவேசம் சண்டையில் இறந்த பட்டவராயன், வண்ணாரமாடன், பலியிடுதலில் இறந்த கசமாடன், வன்னியராயன், சின்னதம்பி, மாசானம், கட்டையேறும் பெருமாள், கொலை செய்யப்பட்ட பொன்னியம்மன், மாடத்தி, தற்கொலை செய்துகொண்ட மாலையம்மன், நல்லதங்காள், பாப்பாத்தியம்மன், பொம்மக்கா, திம்மக்கா, தீப்பாச்சி அம்மன், அம்மணி அம்மன், சுந்தரநாச்சியார், நீலகேசி, பொய்லாம் பூச்சியம்மன், பூலங்கொண்டாள், அருணாலட்சுமி அம்மன், ஜக்கம்மா என பல்வேறு தெய்வங்களை வழிபடலாயினர்.

இந்த தெய்வங்களுக்கு ஊரைக்காக்கும் எல்லை தெய்வங்களாக ஊரின் எல்லையில் அல்லது ஊரின் நடுவில் கோயில் எழுப்பினர். இதில் சில கோயில்கள் ஊர்க்கோயிலாக உள்ளன. அதாவது ஊரில் உள்ள அனைவரும் வரி செலுத்தி அந்த வருவாயில் கோயிலுக்கு விழா நடத்துவது. சில கோயில்கள் இனக் கோயில் களாக, குடும்பக் கோயில்களாக, தனிநபர் கோயில்களாக உள்ளன. இனக்கோயிலாக இருக்கும் கோயில்களில் எல்லோரும் வழிபட்டு வந்தாலும்.  ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே வரி என ஒரு தொகையை நிர்ணயம் செய்து பணம் வசூலித்து விழா நடத்துவர். இதுபோல் குடும்பக் கோயில்களில் அந்த குடும்பத்தினர் மட்டும் பணம் பிரித்து விழா நடத்துவர்.இத்தகைய சிறுதெய்வ, கிராமதெய்வக்கோயில்களில் விழாவின் போதும், தமிழ் மாதக் கடைசி வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளின் போதும். ஆடு, கோழி என உயிர்ப் பலிகள் உண்டு.

சில கோயில்களில் பன்றியும் பலியிடுகின்றனர். பலியிடுதல் என்பது பல கோயில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடுகின்றனர். இத்தகைய கோயில்கள் மிகுதியாக மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மலையோர மாவட்டமான தேனி, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் உள்ளன.

குறிப்பாக  சிறு தெய்வங்களுக்கு சேனாதிபதியாக விளங்குவது சாஸ்தா. அந்த சாஸ்தாவின் கலியுக அவதாரமான ஐயப்பனுக்கு உகந்த மாதம் கார்த்திகை. ஆகவே கார்த்திகை மாதத்தில் மட்டும் சிறுதெய்வக் கோயில்களில் திருவிழா நடத்துவதில்லை.

சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டாலும் அதில் உயிர்ப்பலிகள் இல்லை. காரணம் கார்த்திகை மாதத்தில் தெய்வங்கள் விரதம் இருப்பதாக சொல்லுகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் கோயிலோடு தொடர்புடையவர் ஒருவர் சென்று விளக்கு ஏற்றுவார்.

கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாத தொடக்கத்தில் வரும் முதல் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கலிட்டும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் பலியிடுகின்றனர். கார்த்திகை மாதம் முழுவதும் எந்தவித பலியிடுதலும் இல்லை. சிறுதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பெரும்பாலான பக்தர்களின் வீடுகளிலும் அசைவ சமையல் செய்வதில்லை. காரணம் நம்ம சாமியே கார்த்திகை மாதம் விரதமிருக்கும் நிலையில் நமக்கு மட்டும் ஏன் அசைவ உணவு என்று முடிவு செய்து அவர்களும் தங்கள் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.

61 மாடன்கள்

1. அருவாமாடன், 2. அத்திமாடன், 3. அகழிமாடன், 4. அக்னி மாடன், 5. அடுப்படிமாடன், 6. அன்னமாடன், 7. அரிமுத்து மாடன், 8. அரகுலமாடன், 9. அரையடிமாடன், 10. அரசடி மாடன், 11. ஆண்டிமாடன், 12.ஆவேசமாடன், 13.ஆகாச மாடன், 14.ஆலடிமாடன், 15.இசக்கிமாடன், 16.ஈனமாடன், 17.ஈனமுத்துமாடன், 18.உடுக்கைமாடன், 19. உறிமாடன், 20. உதிரமாடன், 21. ஊசிக்காட்டு மாடன், 22. எசமாடன், 23. ஏறுமாடன், 24. ஒளிமுத்துமாடன், 25. ஒய்யாரமாடன், 26. ஓங்காரமாடன், 27.கசமாடன், 28.கரடிமாடன், 29. சக்திமாடன், 30. சிவமாடன், 31. பன்றி மாடன், 32. பரன்மாடன், 33.படித்துறைமாடன், 34. தேரடிமாடன், 35. குளக்கரை மாடன், 36. கிணத்தடிமாடன், 37. வேம்படிமாடன், 38. பனையடிமாடன், 39.மடையடிமாடன், 40.கரையடிமாடன், 41. செக்கடிமாடன், 42. தெப்பக் குளத்து மாடன், 43. வயக்கரை மாடன், 44. வாழை மரத்தடி மாடன், 45.சுடுகாட்டுமாடன், 46.நல்லமாடன், 47.நடுக்காட்டுமாடன், 48. வண்டிமாடன், 49. முச்சந்திமாடன், 50. சந்தையடிமாடன், 51.வண்ணாரமாடன், 52. வெள்ளாவி மாடன், 53. அணைக் கரைமாடன், 54. சப்பாணிமாடன்,

55. கொம்புமாடன், 56. கொடிமரத்து மாடன், 57. தூசிமுத்துமாடன், 58. குதிரமாடன், 59. பிச்சிப்பூமாடன், 60. பூக்குழிமாடன். 61. பேச்சி மாடன்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: