ஐதராபாத்: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு கதை எழுதி மற்றும் திரைக்கதை அமைத்து அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் ‘கண்ணப்பா’. ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், பிரம்மானந்தம், மதுபாலா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சிவபெருமானின் பக்தரான கண்ணப்பரின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ரகு பாபு, நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது, “கண்ணப்பா படத்தை யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்” என்றுள்ளார். இவரது பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.