வளங்கள் தந்தருள்வார் வைகுண்ட வாசப்பெருமாள்

பரமேஸ்வர மன்னனால் காஞ்சியின் வட பகுதியில் ‘‘பரமேஸ்வர விண்ணகரம்’’ என்ற வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. இது ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஆலயம். அதன்பின் வந்த பல்லவ மன்னராலும், பக்தர்களின் பெருமுயற்சியாலும், தூசி கிராமத்தில் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் ஸ்ரீதேவி,பூதேவியுடன் சின்முத்திரை தரித்து கையில் தாமரையை ஏந்திய திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். தாயார் சந்தானவல்லி. பெயருக்கேற்றாற்போல் மழலை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தால் தட்டாமல் அந்த வரத்தை அருள்கிறாள். அதை மெய்ப்பிப்பது போல் கருவறை விமானத்தில் குழந்தையை ஏந்திய அற்புத சந்தானலட்சுமி திருக்கோலத்தில் தாயாரை தரிசிக்கலாம்.

உற்சவர், காஞ்சி பேரருளாரனான வரதராஜப் பெருமாளைப் போன்ற தோற்றப் பொலிவில் சேவை சாதிக்கிறார். மேலும் நம்மாழ்வார், கலியன் போன்ற ஆழ்வார்கள், ராமானுஜர், சுவாமி தேசிகர், ஆதிவண்சடகோபர் போன்ற ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ ஆச்சாரியரான சுவாமி ஆதிவண்சடகோபர் சில ஆண்டுகள் இத்தலத்தில் எழுந்தருளியிருந்ததால் இத்தலம் சடகோபபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன் சான்றாக இத்தல வைகுண்டவாசப் பெருமாள் சந்நதியில் ஆதிவண்சடகோப சுவாமிகளின் திருவுருவம் உள்ளது.

ஆங்கிலேயர்கள், அப்போது ஆற்காட்டை ஆண்டு வந்த நவாபுடன் போர் புரிய வந்தார்கள். ஆங்கிலேயர்களின் குதிரைப்படை, காலாட்படை, பீரங்கி வண்டிகள் போன்றவை இவ்வூர் வழியே வந்தபோது உருவான புழுதி, பெருமண்டல தூசியாக எழுந்ததால், இந்த ஊர் ‘தூசி’ என்றே அழைக்கப்படலாயிற்று. மேலும், இவ்வூரில் வீர ஆஞ்சநேயர் தன்னிகரற்ற பெருமையோடு விளங்குவதால் இத்தலம் ‘தூசி மதுரா அனுமந்தப்பேட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் ஆதிவண்சடகோபர் எழுந்தருளி இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராஜசுவாமி, இத்திருக்கோயிலுக்கு எழுந்தருள்கிறார். அன்றைய தினம் ஆதிவண்சடகோப சுவாமிகளுக்கு மாலை, மரியாதை, சடாரி ஆகியவை, விசேஷமாக வரதராஜப்பெருமாளால் அருளப்படும். அவ்வாறே இத்தலத்தின் சார்பில் காஞ்சி வரதராஜருக்கு பதில் மரியாதையாக செய்யப்படும்.

அன்றைய தினம் இத்தலத்திற்கு வந்து அந்நிகழ்வை தரிசித்தால் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது ஐதீகம். நான்கு மாட வீதிகள் சூழ நடுவே கோயில் கொண்டுள்ள சந்தானவல்லி சமேத வைகுண்டவாசப் பெருமாள் இவ்வூர் வாழ் மக்களுக்கு மட்டுமின்றி தன்னை நாடிவரும் பக்தர்களின் வாழ்வில் வளங்கள் பெருக அருள்கிறார். காஞ்சிபுரம் - வந்தவாசி வழியில் காஞ்சிபுரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தூசி கிராமத்தில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

Related Stories: