காணிப்பாக்கத்தில் 5வது நாள் பிரமோற்சவம் : ரிஷப வாகனத்தில் விநாயகர் வீதி உலா

சித்தூர்: காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் ரிஷப வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 21 நாட்கள் பிரமோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 14ம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவில் பக்தர்கள் விநாயகர் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்தும் கோலாட்டம் ஆடியபடியும் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் சித்தி, புத்தி சமேத விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 6வது நாளான இன்று கஜ வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வருகிறார்.

நாளை முக்கிய சேவையான ரத உற்சவம் நடக்கிறது. இதையொட்டி மரத்தால் செய்யப்பட்ட மகா ரதத்தில் பொருத்துவதற்காக கலசம் மற்றும் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ரதத்தில் பொருத்தப்பட்டது. ரத உற்சவத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து காணிப்பாக்கத்துக்கு பக்தர்கள் விரைந்துள்ளனர். இதனால் காணிப்பாக்கம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் உள்ள மண்டபத்தில் பரத நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர்.

Related Stories: