சென்னை: முதலில் ஒரு தேர்தலை சந்திக்கட்டும். விஜய்க்கு இருப்பது ரசிகர்கள் கூட்டம்தான் என்று எடப்பாடி தெரிவித்தார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம். அதுதான் எங்கள் நோக்கம். ஏற்கனவே உள்துறை அமைச்சர் கூட்டணிக்கு தலைமை அதிமுக என்று அறிவித்திருக்கிறார். அதிமுக தான் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்று அறிவித்துவிட்டனர்.
கண்டிப்பாக 210 இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம். அதிமுகவை பொறுத்தவரை மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்தவர். முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தனி இயக்கம் கண்டார். ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இருவருடைய கருத்தும் ஒன்றாக இருந்ததால் இணைந்தோம். மேலும் சில கட்சிகள் இணையும். கூட்டணி விவகாரத்தில் சூழ்நிலைக்கு தக்கவாறு தான் எந்தக் கட்சியும் முடிவெடுக்கும். விஜய் ஒரு சிறந்த நடிகர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் முழுக்க முழுக்க நம்புவது அவருடைய ரசிகர்களை. விஜய் பற்றி மக்கள் தான் முடிவு செய்வார்கள், நான் கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள். எத்தனை முனைப் போட்டி என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தெரியவரும். எத்தனை சதவிகிதம் ஓட்டு விஜய் வாங்குவார் என்பதும் சொல்ல முடியாது. அவர் ஒரு தேர்தலையாவது சந்திக்க வேண்டும். அதன்பின்னர் தான் தெரியும். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுக்குழுவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தினால், ஓபிஎஸ்சை சேர்க்க வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* பாஜவுக்கு 40 சீட்டா?
‘பாஜவுக்கு 40 சீட்களா என்பது இப்போது சொல்ல முடியாது. விரைவில் வெளியிடுவோம். கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் என்று இன்னும் பேசவில்லை. தேர்தல் நெருக்கத்தில் அதுபற்றிப் பேசி அறிவிப்போம்’ என்று எடப்பாடி தெரிவித்தார்.
