சிலரின் சுயநலத்துக்காக அமைக்கப்பட்டது அதிமுக- பாஜ துரோக கூட்டணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: என்டிஏ என்கிற பெயரில், தமிழ்நாட்டில் பாஜ உருவாக்கி இருக்கும் கூட்டணிக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது. அது, முழுக்க முழுக்க கட்டாயத்தினாலும், ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும் கூடியுள்ள துரோக கூட்டணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியலில், நிறைய மாடல்கள் இருக்கிறது. அதில் ‘யூனிக் மாடல்’, திராவிட மாடல். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், அனைத்து மாவட்டங்களும், இரண்டாம் நிலை – மூன்றாம் நிலை நகரங்களும், ஊரக பகுதிகளும்கூட வளர்ச்சி அடைந்திருக்கிறது. சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளும், போக்குவரத்து வசதியும் இருக்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.

இந்த மாநிலத்திற்கு என்று பரந்துபட்ட அரசியல் பார்வை இருக்கிறது. இங்கு சமூகநீதியையும், சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் நலனையும் முக்கியமாக நினைக்கிறோம். இது எல்லாவற்றையும் சரியாக கொண்டு சென்று, திறமையான அரசை நடத்துவதால்தான், இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இந்த வளர்ச்சியை நாங்கள் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. சமூகத்தில் எந்தவொரு பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்று, மிகவும் கவனமாக பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம்.

ஒருபக்கம், ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வரும் அரசியல் நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு, மறுபக்கம் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தேவைகளுக்கு ஏற்ப, எங்களின் கொள்கைகளும் ‘முன்னேற்றம்’ ஆகி வருகிறது. மகளிர், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர், உழவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செய்துகொண்டு இருக்கும் திட்டங்களை ஹைலைட்டாக சொல்ல விரும்புகிறேன். மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை, மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், திருநர்களுக்கும், மலைப்பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்தோம். நாங்கள் கொண்டு வந்த இந்த இரண்டு திட்டத்தையும், இப்போது பல்வேறு மாநிலங்களும் வழங்க தொடங்கி இருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல், நாட்டிற்கே வழிகாட்டி என்பதற்கான அடையாளம். அதேபோல், இன்னொரு திட்டம். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்.

இதன் ரிசல்ட், சமூக முன்னேற்ற குறியீடுகளில் எதிரொலித்தது. அடுத்து, தமிழ்நாட்டை பார்த்து ஒன்றிய அரசு கொண்டு வரப்போகும் திட்டம். அதுதான், நான் முதல்வன் திட்டம். அதேபோல், மாணவர்களை டிராப்-அவுட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கும் ஒரு திட்டத்தை தீட்டினோம். அதுதான் 12 லட்சம் மாணவ – மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம். அடுத்து, இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். அதேபோல், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணிநேரத்தில், ட்ரீட்மெண்டுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும், ‘இன்னுயிர்க் காப்போம் – நம்மைக் காக்கும் 48’.

இப்படி, இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. நான் இப்போதைக்கு பெயர்களை மட்டும் சொல்கிறேன். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், இதயம் காப்போம், பாதம் காப்போம், ஊட்டச்சத்தை உறுதிசெய், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கனவு இல்லம், கலைஞர் கைவினைத் திட்டம், வடசென்னை வளர்ச்சி திட்டம், தோழி விடுதி, ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம், வேர்களைத் தேடி, தாயுமானவர், அன்புக்கரங்கள் என்று வரிசையாக ஏராளமான திட்டங்கள் இருக்கிறது.

மக்கள்நல திட்டங்களுக்கு அடுத்து, உட்கட்டமைப்பை எடுத்துகொண்டால், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம், மதுரை, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் உள்ளிட்ட ஏராளமான உட்கட்டமைப்பு திட்டங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இதையெல்லாம் மேடைகள்தோறும் நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நான் அடிக்கடி சொல்வேன்… இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதேபோல் வளர்ச்சியும், தெற்கில் தமிழ்நாட்டில் தொடங்கி தான் எழுதப்பட வேண்டும். இந்த க்ரோத் ஹிஸ்டரியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்தான். அதில் முதல் குற்றச்சாட்டு, அரசியல் வாரிசு. இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களுக்கு முன்னால் நின்று, அவர்கள் நம்பிக்கையை பெற்று ஓட்டு பெற்றால் மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு.

அடுத்து சொல்வது என்ன? ஊழல்! இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்களா? கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள். நான் பாஜவிடம் கேட்பது என்வென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக. நீங்கள் கூட்டணியில் இல்லாத சமயத்தில், அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்கள் எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி.

அடுத்து, இந்து விரோத கட்சி என்று பேசுவார்கள். ஆனால், உண்மை என்ன? இந்தியாவிலேயே, பாஜ ஆளுகின்ற மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு, நாங்கள் ஆட்சி அமைத்து இந்த 1,730 நாட்களில், நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். உண்மையான பக்தர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படி, பாஜ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் ஆதாரத்தோடு பதில் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்களோ, நாங்கள் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. இப்போது உங்கள் முன்பாகவும் கேட்கிறேன்…

இந்தி திணிப்பை ஏற்காததால் கொடுக்காமல் இருக்கும் கல்வி நிதி எப்போது வரும்? பாஜ ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, இயற்கை பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை கூட முறையாக தரவில்லையே ஏன்? கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது அனுமதி வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? – இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கிறது. இது எதற்குமே அவர்களிடம் இருந்து பதில் வராது. ஏனென்றால், இது எல்லாமே, பாஜ தமிழ்நாட்டிற்கு செய்திருக்கக்கூடிய துரோக லிஸ்ட். அவர்கள் ஒவ்வொரு முறை இங்கு வரும்போது, அந்த லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.

நாங்கள் எதற்காக இவ்வளவையும் பேசுகிறோம் என்றால், நம்முடைய இந்திய நாடு ஒற்றுமையாக, வலிமையாக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவையும் சொல்கிறோம். நாங்கள் நாட்டின் யூனிட்டிக்காக பேசுகிறோம். பாஜவோ யூனிஃபார்மிட்டி பேசி, பாசிச அரசியல் செய்கிறது. மாநிலங்கள்தான், நாட்டின் அடித்தளம். இந்தியா என்பது, ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’. இதை பாஜ உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் ஒன்றிய அரசு என்று நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தையும், இந்த நாட்டில் வாழும் மக்களையும் காப்பாற்றுவதுதான் உண்மையான நாட்டுப்பற்று என்று நாங்கள் அழுத்தமாக சொல்கிறோம்.

என்டிஏ என்கிற பெயரில், தமிழ்நாட்டில் பாஜ உருவாக்கி இருக்கும் கூட்டணிக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது. அது, முழுக்க முழுக்க கட்டாயத்தினாலும், ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும் கூடியுள்ள துரோகக் கூட்டணி அது.
நான் உறுதியாக சொல்கிறேன்… என்டிஏவுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாடு நிச்சயம் வழங்கும். நான் மக்களை நம்புகின்றவன். அண்ணா சொன்னது போல, மக்கள் கூடவே வாழ்பவன். இன்னும் பல திட்டங்களை உருவாக்கி, இந்தியாவில் தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலம் என்று தொடர்ந்து பெருமையுடன் சொல்ல நான் உழைப்பேன்.

அதற்காகத்தான், ‘உங்க கனவ சொல்லுங்க’ என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோருடைய குரலையும் கேட்க தொடங்கியிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியிலும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் பேச இருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளையும் நான் நிச்சயம் முழுமையாக கேட்பேன். அதில் அவதூறுகளை புறந்தள்ளிவிட்டு, ஆக்கப்பூர்வமானதை கவனத்தில் எடுத்துகொண்டு, திராவிட மாடல் 2.0 அரசு அமைய நிச்சயம் பாடுபடுவேன் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதேபோல் வளர்ச்சியும், தெற்கில் தமிழ்நாட்டில் தொடங்கி தான் எழுதப்பட வேண்டும்.
* இந்த க்ரோத் ஹிஸ்டரியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
* நான் பாஜவிடம் கேட்பது என்வென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக.
* நான் பாஜவிடம் கேட்பது என்னவென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக.

* தமிழ்நாடு vs என்டிஏ
‘நான் கேட்கிறேன்… நீட் தேர்வு விலக்கு பற்றி அக்கறையுடன் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சியினர், அவர்களின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜவிடம் அதை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள்? அஞ்சி நடுங்குகிறார்கள்? தமிழ்நாட்டு மீது பாஜ வலுக்கட்டாயமாக திணித்திருக்கும் திட்டங்கள் பற்றி குரல் எழுப்ப திராணியில்லாமல் இருப்பவர்கள், நெஞ்சை நிமிர்த்தி எப்படி மக்களுக்காக கேள்வி எழுப்புவார்கள்? தமிழ்நாட்டின் தன்மானத்தை காப்பதற்கு எப்படி தலைநிமிர்ந்து பேசுவார்கள்? அதனால்தான், நடைபெற இருக்கின்ற தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ என்று அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய என்டிஏ கூட்டணியை, அடுத்தடுத்த துரோகங்களுக்கான அச்சாரமாக தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: