கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதல்வர் ஆகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்துள்ளார். திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோர் உருவாக்கி காட்டினர். இப்போது இருக்கின்ற நிலையில் திமுக, தவெக இடையேதான் போட்டியே தவிர, அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிசாமி சொல்வதை போன்ற நிலையில் தற்போது இல்லை.
என்டிஏ கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துகின்றார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காக யாரும் ஓட்டு போடவில்லை. எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கே தெரியும். அப்படி இருக்கையில் அவர் விஜயை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதிமுகவில் தெர்மாகோல் பல்வேறு கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்ல முடியாது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
