கரூர்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ, அமமுக, தமாகா, அன்புமணி (பாமக) மற்றும் குட்டி கட்சிகள் இணைந்துள்ளது. இதில் அவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளையும் கேட்டு வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்காத நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கி தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இதே போல் பாஜ மாவட்ட தலைவர் செந்தில்நாதனும், 2026 தேர்தலில் கரூர் தொகுதியில் எப்படியாவது களம் காண வேண்டும் என குறிக்கோளுடன் மாஜி அமைச்சருக்கு போட்டியாக தனது ஆதரவாளர்களுடன் களத்தில் குதித்துள்ளார். இதையறிந்த மாஜி அமைச்சர், தலைமையிடம் நேரிடையாக சென்று கரூர் தொகுதியில் போட்டியிட தனக்கு எப்படியாவது சீட் கொடுத்தே ஆக வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கரூர் மாவட்ட பாஜ தலைவர் செந்தில்நாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்தார். பின்னர், அவரது நெருங்கிய நண்பரான பாஜவை சேர்ந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மூலம் பாஜவில் செந்தில்நாதன் ஐக்கியமானார். 2026 சட்டமன்ற ேதர்தலில் கரூர் சட்டமன்ற தொகுதியை குறி வைத்து செந்தில்நாதன் தற்போது காய் நகர்த்தி வருகிறார். அண்ணாமலை திரைமறைவில் அதற்கான உதவிகளையும் செய்து வருகிறார். ஏற்கனவே, சொந்த ஊரில் நின்று அண்ணாமலை தோல்வியடைந்ததால், இந்த முறை கோவையில் போட்டியிட திட்டமிட்டு வேலைகளை செய்து வருகிறார். இதனால், சொந்த ஊரில் தனக்கு வேண்டிய ஒருவரை நிற்க வைக்க அண்ணாமலை விரும்புகிறார்.
இந்த தகவலை அறிந்து கடும் அப்செட் ஆன மாஜி அமைச்சர், சென்னைக்கு சென்று தலைமையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாஜி அமைச்சர், கரூர் தொகுதி நமக்கு தான் ஒதுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பாஜவுக்கு விட்டு கொடுக்க கூடாது. கரூர் தொகுதியில் நிற்பதற்காக பாஜ மாவட்ட தலைவர் காய்நகர்த்தி வருவது பற்றியும், இதற்கு மறைமுகமாக அண்ணாமலை சப்போட்டாக இருப்பது பற்றியும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார். அதற்கு தலைமையும், அண்ணாமலை நினைப்பது எல்லாம் கரூரில் நடக்காது. அது அந்த காலம். நீங்கள் தைரியமாக செல்லுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்களாம்.
இதில் ஒருவேளை பாஜவுக்கு கரூரில் சீட் கிடைக்காவிட்டால் பாஜ மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாஜி போலீஸ் அதிகாரி மூலம் டெல்லியின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக-பாஜ இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டெக்ஸ்டைல்ஸ் மாவட்டமான கரூர் சட்டமன்ற தொகுதியை விட்டு கொடுக்க கூடாது என்பதில் அதிமுகவும் தீவிரமாக இருக்கிறது. அதேவேளையில், 2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் எப்படியாவது களம் காண வேண்டும் என்பதில் பாஜவும் மல்லுக்கட்டுகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்ததெந்த தொகுதி என முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. அதற்குள் சீட்டுக்காக இருவரும் மோதிக்கொள்வதால் இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்’’ என்றனர்.
