‘பில்டப் பண்றமோ, பீலா விடுறமோ முக்கியமில்ல…’ வாய்ப்பில்லைன்னு எடப்பாடி சொன்னது பழைய செய்தி: குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ஓபிஎஸ்

தேனி: அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பழைய செய்தி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எதிரும், புதிருமாக இருந்த டிடிவி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து இருக்கிறார்கள். அதிமுகவில் இணைய நான் ரெடி. இதற்கு டிடிவி.தினகரன் உதவ வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். முன்னதாக டிடிவி.தினகரனும், இத்தனை வருடமாக இருந்த அதிமுகவுக்கு ஓபிஎஸ் நன்றிக்கடனாக கூட்டணியில் இணைய வேண்டுமென தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘‘பொதுக்குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருக்கிறார். அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை’’ என தெரிவித்திருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சால், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த சூழலில் நேற்று, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம், வீட்டில் இருந்து போடி தொகுதிக்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள், அவரிடம், ‘‘உங்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே’’ என கேட்டதற்கு, ‘‘அதெல்லாம் பழைய செய்தி’’ என ஒற்றை வரியில் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார். ஓபிஎஸ் இந்த பதிலை டிரால் செய்யும் நெட்டிசன்கள், ‘பில்டப் பண்றமோ, பீலா விடுறமோ முக்கியமில்ல… நாம என்ன செய்தாலும் இந்த உலகம் நம்மள உற்று பார்க்கணும்…’’ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

* ஓபிஎஸ் சேர்ப்பா? இபிஎஸ் முடிவு: நழுவிய பாஜ
பாஜ தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘பாஜவில் எந்த தொகுதியில், யார் போட்டியிடுவது என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்யும். அடுத்த 40 நாட்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் பிரச்னைகளை கேட்டறியவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனக்கு 3 தொகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பு வழங்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவேனா என்பதை கட்சி முடிவு செய்யும் என்றார். கூட்டணியில் ஓபிஎஸ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு, ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே ஓபிஎஸ்-ஐ இணைப்பது குறித்து அவர் தான் முடிவு செய்வார்’’ என்றார்.

Related Stories: