நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர்

மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?.

புது கான்செப்ட்டா கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை. இது தவறு. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்ற காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. மாநில அரசு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி துக்கம் விசாரிக்க போகலாமே? அவரை பற்றி பேசுவதை விட்டாச்சு. தவெக எங்களை பற்றி பேசியதை வாபஸ் பெற்று விட்டனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். இவ்வாறு கூறினார்.

அப்போது நிருபர்கள், ‘‘ஓபிஎஸ் அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறாரே’’ என நிருபர்கள் கேட்டபோது, செல்லூர் ராஜூ, ‘‘ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாகத்தான் கேட்க வேண்டுமா? ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்’’ என்றார். ‘‘அதிமுக வெற்றிபெறும் தொகுதியை பாஜ கேட்கிறதே’’ என்று கேட்டதற்கு, ‘‘மோடி, அமித்ஷா, நயினார் நாகேந்திரன் எல்லாம், உங்கக்கிட்டே நேர்ல வந்து சொன்ன மாதிரி கேட்காதீங்க… ப்ளீஸ்… அப்படியெல்லாம் எந்த விஷயமும் நடக்கலை…’’ என்று கூறி சிரித்தபடியே கிளம்பிச் சென்றார்.

* தெர்மாகோல் விஞ்ஞானி அறிக்கை மன்னன்: தாமரையில் மோதும் மாநிலம், மகளிரணி
மதுரை தெற்கு தொகுதியில் சீட் கேட்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.சரவணன் விருப்ப மனு அளித்து உள்ளார். ஆனால், அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அதிமுக கட்சி வட்டாரத்தில் கூறி வருகின்றனர். ஆனால், இவருக்கு உட்கட்சி பூசல் காரணமாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் தெர்மாகோல் விஞ்ஞானி அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, எஸ்.எஸ்.சரவணனுக்கு சீட் வாங்கி கொடுத்து தேர்தல் பணிகளை செய்து வந்தார். ஆனால், தேர்தல் தோல்விக்கு பின்னர் செல்லூர் ராஜூவை கைவிட்டு, அறிக்கை மன்னனான மாஜி அமைச்சர் உதயகுமார் அணிக்கு சென்று விட்டார்.

இதனால், கடும் கோபம் கொண்ட செல்லூர் ராஜூ, இந்த முறை எஸ்.எஸ்.சரவணனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என தலைமையிடத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், உதயகுமார் இவருக்கு சீட்டு பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். எதற்கு பஞ்சாயத்து என யோசித்த தலைமை, பேசாமல் தெற்கு தொகுதியை கூட்டணி கட்சியான பாஜவுக்கு தர திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றும் கூறலாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்த தொகுதியில் அங்கு உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்த பாஜ மகளிரணி நிர்வாகியான மகாலட்சுமி சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அதே கட்சியை சேர்ந்த கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசனும் மதுரை தெற்கு தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இதனால் பாஜவுக்கு கிடைக்கும் ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் போட்டி போட்டு இப்போதே வேலைகளை பார்த்து வருகின்றனர். கடந்த எம்பி தேர்தலில் அந்த தொகுதியில் அதிக ஓட்டு பெற்றிருப்பதால் தனக்கு மீண்டும் அதிக ஓட்டு கிடைக்கும் என நம்பி, ராம.சீனிவாசன் சீட் கேட்டு பிடிவாதமாக உள்ளார். உறுதியாக தனக்குத்தான் தர வேண்டும் என மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மகாலட்சுமி தரப்பும் பதிலுக்கு மல்லுக்கட்டி வருகிறது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஒரே தொகுதியில் பாஜவிற்குள் உனக்கு, எனக்கு என போட்டி நிலவி வருகிறது.

Related Stories: