நாங்க ஹீரோ ஹீரோயின் இல்லீங்க தாய்ங்க! தேர்தல் அறிக்கை குறித்து தமிழிசை ரவுஸ்

சென்னை: தமிழ்நாடு பாஜ சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை அமைந்தக்கரையில் “மக்களுக்காக, மக்களிடமிருந்து” எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்களை மக்களிடமிருந்து நேரடியாக பேரும் நோக்கில், தமிழ்நாடு பாஜ சார்பில் வாகன இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடியசைத்து வாகன பயணத்தை தொடங்கி வைத்தனர்.

மேலும், மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்காக 7878786060 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து கருத்துகளை தெரிவிக்கும் வகையில் மிஸ்டு கால் இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் 7 நாளில் 39 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள், மக்களின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கும். நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், ‘இந்த தேர்தல் அறிக்கை மக்களுக்காக மக்களிடமிருந்து நாங்கள் சொல்லி இருக்கிறோம். பிரதமர் தலைமையில் பாஜ நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, எங்களது கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட அத்தனை கட்சிகளின் துணையோடு நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒரு கட்சி தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்கிறது, ஒரு கட்சி கதாநாயகி என்கிறது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தாய் அறிக்கை, தாயான அறிக்கை ஆகும். மக்களிடம் நேரடியாக சென்று, மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கருத்து கேட்கிறோம். மூன்று பக்கம் கடலால் சூழ்ந்திருக்கும் தமிழ்நாடு என்று சொல்வதை விட கடனால் பிறக்கும் தமிழ்நாடு என்று தான் சொல்ல வேண்டும். நெடுங்கால வளர்ச்சியை கொடுக்கும் தேர்தல் அறிக்கையாக பாஜ தேர்தல் அறிக்கை இருக்கும். பல மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: