பாஜ ஆட்சியை கவிழ்த்த ‘வெங்காயம்’: பிரசார ஆயுதமாகப்போகும் தங்கம்!

நாகர்கோவில்: இந்தியத் தேர்தல் வரலாற்றில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பது பலமுறை அரசியல் ஜாம்பவான்களாக விளங்கிய கட்சிகளின் வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இந்திய அரசியலில் வெங்காயம் ஒரு அரசியல் காரணி என்று அழைக்கப்படுகிறது. 1980 மக்களவைத் தேர்தலில் வெங்காய விலை உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்ததைப் பயன்படுத்தி, இந்திரா காந்தி வெங்காய மாலையை அணிந்து அப்போது பிரசாரம் செய்தார். இது ஜனதா கட்சியின் வீழ்ச்சிக்கும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவும் காரணமாக அமைந்தது. 1998 டெல்லி மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்ததால், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பாஜ படுதோல்வியைச் சந்தித்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் என எரிபொருள் விலை உயர்வு போக்குவரத்துச் செலவை அதிகரிப்பதன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது. இதன் தாக்கத்தைக் குறைக்க, தேர்தல்களுக்கு முன்னதாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைக்கும் போக்கு சமீபகாலமாகத் தொடர்ந்து வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவது என்பது இப்போது ஒரு வழக்கமான முறையாக மாறியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத் தலைவிகளின் வாக்குகளைப் பாதிக்கும் காரணியாகும். இதனால் தான் பல தேர்தல்களில் மலிவு விலையில் சிலிண்டர் என்பது முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுகிறது.

இதுபோல், தங்கத்தின் விலையும் வரலாறு காணாத உச்சத்தை நாளுக்குநாள் தொட்டு வருகிறது. இதை குறைக்க ஒன்றிய அரசால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசுக்கு எதிராக தங்கம் விலை உயர்வை ஒரு பிரசார ஆயுதமாக மாற்றினால், அது தேர்தல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஜனவரி 2026 நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

தங்கம் விலை உயர்வைக் காட்டி, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக, தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு முக்கிய தேர்தல் விவாதமாகும். பிற மாநிலங்களை போல் அல்லாமல் தமிழ்நாட்டில் தங்கம் பெண்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த ஒன்று. திருமணங்களுக்கான அடிப்படைத் தேவை. இந்த சூழலில் நாள்தோறும் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயருவதால் நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மத்தியில் நிலவும் பொருளாதார அதிருப்தி, அது ஒன்றிய அரசின் மீதே திரும்ப வாய்ப்பு உள்ளது.

தங்கம் விலை உயர்வு காரணமாக நகை விற்பனை 25% முதல் 50% வரை சரிந்துள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான நகைத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தும் கட்சிக்கு அவர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியா தனது தங்கத் தேவையில் 90%-க்கும் மேலாக இறக்குமதி செய்வதால், ஒன்றிய அரசு விதிக்கும் இறக்குமதி வரி உள்நாட்டு விலையை நேரடியாகத் தீர்மானிக்கிறது. சமீபத்திய வரவு-செலவுத் திட்டங்களில் இந்த வரி விகிதங்களில் செய்யப்படும் மாற்றங்கள் விலையை உடனடியாகப் பாதிக்கின்றன. பொருளாதார ஆய்வுகள் படி, வரி குறைக்கப்பட்டால் மட்டுமே சாமானியர்களுக்குத் தங்கம் கட்டுப்படியாகும். அதற்கு ஒன்றிய அரசுதான் முயற்சிக்க வேண்டும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவது ஒன்றிய அரசின் நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதன் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சரிவடைந்து ரூ.92 என்ற நிலையை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைவது தங்கத்தின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, அதன் மூலம் விலையை உயர்த்துகிறது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது, பணவீக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இது தேவையை அதிகரித்து விலையை மேலும் உயர்த்துகிறது. ரூபாய் மதிப்பு பலவீனமடையும் போது, அது நேரடியாகத் தங்கத்தின் விலையைச் சுமையாக்குகிறது. எனவே ரூபாயின் மதிப்பை உயரச்செய்யவோ, சரிவை தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசின் இந்த கையறு நிலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தங்கம் விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பதால், வரும் தேர்தலில் இந்த தங்கம் விலை உயர்வு என்ற பெரிய போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமையும். எனவே, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சவரன் ரூ.1.34 லட்சத்தைத் தாண்டியுள்ள தங்கம் விலை உயர்வும் ஒன்றிய அரசுக்கு எதிரான, அதன் கூட்டணிக்கு எதிரான வலிமையான பிரசார ஆயுதமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் மொத்த வீட்டுத் தங்கத்தில் 30% தமிழ்நாட்டு குடும்பங்கள் வைத்திருக்கின்றன. அதன்படி, அதிக தங்கம் வைத்து உள்ள பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மாநிலம் தங்கம்
(டன் கணக்கில்)
தமிழ்நாடு 7000
கர்நாடகா 4000
ஆந்திரா 2,750
கேரளா 1875
தெலங்கானா 1250

Related Stories: