தஞ்சாவூர்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வதந்திகள் அனைத்திற்கும் எம்.பி., கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்வோம். கூட்டணி முடிவை அகில இந்திய தலைமை தான் எடுக்கும். அந்த அடிப்படையில் தேர்தலைப் பற்றி, எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முடிவெடுப்பார்கள். பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.
