முதல்வருடன் பிப்.5ம் தேதி காங்கிரஸ் கூட்டணி பேச்சு: சென்னை வருகிறார் கே.சி.வேணுகோபால்; இறுதியாகிறது தொகுதி பங்கீடு

சென்னை: வரும் பிப்.,5ல் சென்னை வரும் காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால், முதல்வரை நேரில் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் அனல் பறக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக- காங்கிரஸ் இடையே எழுந்துள்ள தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

பீகார் தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சீக்கிரமாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்பதில் டெல்லி மேலிடம் உறுதியாக இருந்து வருகிறது. கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலிலும் இதே கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தொடர்ந்து திமுகவிடம் கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக திமுக- காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வந்தது.

இதை அறிந்த டெல்லி தலைமை ‘யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிரடியாக அறிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் பேசிய அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் தங்கள் கட்சியின் நிலைபாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்தடுத்து திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் வரும் பிப்ரவரி 5ம்தேதி சென்னை வருகிறார். அன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பல்லாவரம் முதல் குரோம்பேட்டை வரை நடைபெற உள்ள நடைபயணத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

அன்றைய தினம் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்ைத நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மேலிட தலைவர்களின் விருப்பத்தை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் திமுக- காங்கிரஸ் இடையே எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்ையை சீக்கிரமாக முடிப்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலின் சென்னை வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: