நெல்லை: நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக சார்பில் நெல்லை, பாளை. சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் தச்சநல்லூரில் நேற்று நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: இந்த இயக்கம் உழைப்பினால் வளர்ந்த இயக்கம். செல்லும் இடமெல்லாம் நமக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. எனவே வருங்காலத்தில் தேமுதிக சரித்திரம் படைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சோர்ந்து போகாமல் உழையுங்கள். 2026ல் உங்களை அரசு பதவிகளில் அமர்த்துவது தான் எனது வேலை. நாங்கள் கூட்டணி குறித்து 9ம் தேதி மாநாட்டில் அறிவிப்போம் என்று தான் நான் கூறினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு செய்து வைத்துள்ளோம்.
ஆனால் இன்று வரை ஆளுங்கட்சியோ, ஆண்ட கட்சியோ, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியோ, இது தான் எங்கள் கூட்டணி என இறுதி முடிவு என அறிவிக்காத போது, தேமுதிக மட்டும் ஏன் அவசரப்பட்டு கூட்டணியை அறிவிக்க வேண்டும். உரிய நேரம் வரும் போது நிச்சயம் அறிவிப்போம் என்று தான் சொன்னேன். நாங்கள் யாரிடமும் கூட்டணி பேரம் பேசவில்லை. யாரிடமும் போய் எங்களுக்கு இவ்வளவு தாருங்கள் என கேட்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து 3வது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. எனவே நமக்கான உரிமை, அங்கீகாரம், மரியாதை வேண்டும் என கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு பக்கமும் பேசுகிறார்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. கடைக்கோடி தொண்டன் யாருடன் கூட்டணி வேண்டும் என்று நினைக்கிறானோ அது நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
