கணக்கு போட்டு முடிச்ச பாஜ: புதுச்சேரியில் 2 சீட்தான்; என்.ஆர் காங்கிரசிடம் இருந்தும் தொகுதிகள் பறிப்பு; அதிமுகவுக்கு வந்த சோதனை

புதுச்சேரி: புதுவையில் பாஜ, என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வருகிறது. கடந்த தேர்தலின்போது, பாஜவுடன் கூட்டணி அமைத்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என அறிவித்து என்ஆர் காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார். ஆனால் அது நிறைவேறாததோடு, பல்வேறு திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு துணை நிலை ஆளுநர் மூலம் முட்டுக்கட்டை போட்டது. இதனால், தேஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் 2026 தேர்தலை சந்திக்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தார். இதுதெரிந்து மேலிடம் கடைசி நேரத்தில் சில நடவடிக்கைகளை எடுத்தது.

புதிதாக பாஜ தலைவரான நிதின் நபின், ஒன்றிய அமைச்சர் மன்சூர் மாண்டவியா ஆகியோர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டணி ெதாடர வேண்டும் என விரும்புவதாக தெரிவித்து அவரை பணிய வைத்தனர். மேலும், புதுவையின் தேர்தல் பொறுப்பாளர் சுரானா, பாஜ தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரும் தொடர்ந்து ரங்கசாமியுடன் பேசி வந்தனர். இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தல் போன்று என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள், பாஜவுக்கு 10 தொகுதிகள், அதிமுகவுக்கு 2 தொகுதிகள், லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லசுக்கு 2 தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் உள்ள அதிமுக தங்களுக்கு கடந்த தேர்தலைப்போலவே 5 தொகுதி தர வேண்டும், குறைந்தபட்சம் 3 தொகுதி வேண்டும், 2 தொகுதியை ஏற்க முடியாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜவை சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் ஒரு எம்எல்ஏ பதவியை என்ஆர்.காங்கிரசுக்கு விட்டுத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜ மூத்த நிர்வாகி கூறும்போது, ‘கடந்த சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மீண்டும் வழங்கப்படுகிறது. இதில் அவர்கள் போட்டியிட்ட ஓரிரு தொகுதிகள் மட்டும் மாற்றம் இருக்கும். அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் தொகுதியான ராஜ்பவன் தொகுதியில் பாஜ தலைவர் ராமலிங்கம் போட்டியிடுகிறார். மற்றொரு தொகுதியிலும் மாற்றம் வருகிறது. இதுபோன்று லாட்டரி அதிபர் மகன் சார்லசுக்கு காமராஜர், நெல்லித்தோப்பு தொகுதி ஒதுக்கப்படுகிறது’ என்றார். இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் கேட்டபோது, ‘என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஆனால் ராஜ்பவன் தொகுதி குறித்து இதுவரை பேச்சு நடத்தவில்லை. வேறு எந்த தொகுதியிலும் நான் நிற்க மாட்டேன். முதல்வர் ரங்கசாமி என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன்’ என்றார்.

* கூட்டணியில் உள்ள அதிமுக தங்களுக்கு கடந்த தேர்தலைப்போலவே 5 தொகுதி தர வேண்டும், குறைந்தபட்சம் 3 தொகுதி வேண்டும், 2 தொகுதியை ஏற்க முடியாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

* டெல்லி செல்கிறார் ரங்கசாமி: புதுவை வருகிறார் மோடி
என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ மற்றும் அதிமுகவுடன் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதை முடிவு ஆகி உள்ளது. ஆனால் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமி அடுத்த மாதம் 2வது வாரத்தில் டெல்லி செல்கிறார். அங்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா மறறும் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது புதுவையில் புதிய திட்டங்களுக்கு அதிகமான நிதியுதவியை கேட்கிறார். இதற்கு கிரீன் சிக்னல் கிடைத்தவுடன், புதுவை திரும்புகிறார். பின்னர் அமித்ஷா, புதுவைக்கு வந்து சென்றவுடன் பிரதமர் மோடி புதுவைக்கு வருகிறார் என பாஜ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: