ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? கரன்சி புரளும் கல்குவாரி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ குடும்பத்துக்கே 3வது முறை சீட்? மாஜி எம்பி ஃபேமிலியும் குஸ்தி; முன்னாள் அமைச்சருக்கு எதிராக சரவெடி கொளுத்த இலை நிர்வாகிகள் ரெடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திண்டிவனம், வானூர் ஆகிய 2 தனித்தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றிபெற்று தன்வசம் வைத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அதிமுக முடிவெடுத்தது. தற்போது, திண்டிவனம் தொகுதியில் அர்ச்சுணனும், வானூரில் சக்கரபாணியும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர். இருவருமே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர விசுவாசிகள். இதனால் இவர்களுக்கே மீண்டும் இந்த தொகுதிகளில் அதிமுகவில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட மற்ற நிர்வாகிகள் பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால், இந்த முறை சீட் கிடைக்காமல் போக கூடாது என்பதற்காக குடும்பத்துக்கே சீட் வாங்க சிட்டிங் எம்எல்ஏ முயற்சித்து வருகிறார். வானூர் தனி தொகுதியில் சக்கரபாணிக்கு 2 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டு 10 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது, 3வது முறையாகவும் சீட் கேட்டு கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளார். இளைஞருக்கு வாய்ப்பு எனும் பெயரில் தனக்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் என்பதால், குடும்பத்திற்கே கிடைக்கும் வகையில் தன் மகன் பெயரிலும் ஒரு விருப்ப மனுவை முன்னெச்சரிக்கையாக போட்டு வைத்துள்ளாராம் சிட்டிங் எம்எல்ஏ சக்கரபாணி.

தமிழகத்தோடு வானூர் இருந்தாலும் புதுச்சேரியில் பிண்ணிப் பினைந்த தொகுதியாகவே இருக்கிறது. சர்வதேச நகரமான ஆரோவில், சுற்றுலா கடற்கரைகள், கோடிக்கணக்கில் பணம் புரளும் கல்குவாரி, எம்சாண்டு தொழிற்சாலைகள் என கரன்சி புரளும் தொகுதியாக இருப்பதால் ருசி பார்த்த சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற தீவிர முயற்சியில் களமிறங்கி இருக்கிறாராம். இதற்காக மாஜி அமைச்சரை கைக்குள் போட்டுக் கொண்டு தேர்தல் வேலைகளை முன்னதாகவே தொடங்கி விட்டாராம்.

ஆனால் அதிமுகவிலோ கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் சீட் கிடைக்காமல் தவம் கிடக்கிறோம். ஒரே குடும்பத்திற்கு 3வது முறையாக சீட் கொடுத்தால் எங்கள் வேலையை போட்டுக் காட்டுவோம் என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்களாம். மேலும், சிட்டிங் எம்எல்ஏ மகன் மீதான கல்குவாரி வெடி விபத்து வழக்கையும் தலைமைக்கு எடுத்து போட்டுக் காட்டி சீட் வழங்க தடைபோட்டு வருகிறார்களாம். ஏற்கனவே, அதிமுகவில் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெற்றவரான முருகன் மற்றும் எம்பி பதவியில் இருக்கும்போதே விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்தினரும் அனுதாபம், முன்னுரிமையில் எங்கள் குடும்பத்திற்குதான் சீட் வழங்க வேண்டுமென கட்சித் தலைமையிடம் நேரடியாக வலியுறுத்தி வருகிறார்களாம்.

மற்றொரு பக்கம் பலகோடி கரன்சியை வைத்திருக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்து சீட் கேட்டுள்ளார்களாம். இப்படி சிட்டிங் எம்எல்ஏவுக்கு எதிராக தொகுதியில் மூத்த நிர்வாகிகள் பலரும் ஒட்டுமொத்தமாக களமிறங்கி இருப்பதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே இலை வட்டாரத்தில் சலசலப்பு நிலவுகிறதாம். இதனையும் மீறி மாஜி அமைச்சர், சிட்டிங் எம்எல்ஏவுக்கே சீட் வாங்கி கொடுத்தால் நிச்சயம் கல்குவாரிகளைபோல் அதிமுகவில் மிகப்பெரிய தேர்தல் சரவெடி வெடிப்பது உறுதி என்கின்றனர் அதிமுக அடிமட்ட தொண்டர்கள்.

Related Stories: