விருதுநகர், டிச. 30: விருதுநகரில் மதுரை சாலை, பஜார் பாவாலி சாலை முதலான பகுதிகளில் புதிய வாறுகால் கட்டுமானத்திற்காக பாலங்கள் கட்டப்பட்டன. அந்த இடத்தில் சிறிய சிறிய ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுவதால் டூவீலரில் செல்வோர் தூசி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். விருதுநகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் மழைக் காலங்களில் வாறுகாலில் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைபட்டு விடும். இதனால் முக்கிய சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து காணப்படும். இந்த வழியாக நடந்து செல்வோர், டூவீலரில் செல்வோர் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுரை சாலையில் இரண்டு இடங்கள், பஜார், பாவாலி சாலை முதலான நான்கு இடங்களில் வாறுகால் பாலங்கள் கட்டுவதற்காக, பெரிய இயந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்தப் பாலங்களின் இருபுறமும் தலா 5 மீட்டர் அளவுக்கு சிறிய சிறிய அளவிலான ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படு கின்றன.
மதுரை சாலை பாவாலி சாலையில் உள்ள இந்தப் பாலங்கள் வழியாக பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் தூசிகள் பறக்கின்றன. மேலும் டயர்களில் சிக்கும் ஜல்லிக்கற்கள், பின்னால் டூவீலரில் வரக்கூடியவர்களின் மேல் விழுவதால் காயமடைகின்றனர். மேலும் இந்தப் பாலங்களில் டூவீலரில் செல்வோர், கீழே விழுந்து காயம் அடைவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே வாறுகால் பாலங்கள் கட்டப்பட்ட பகுதிகளின் இரு புறமும் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
