ஜெயங்கொண்டம், டிச. 30: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ரூ.8,700 கோடி உர மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோரியம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆண்டிமடம் வட்ட 8வது மாநாடு நடைபெற்றது.
சங்க ஒன்றிய துணைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநாட்டில் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு மாவட்ட துணைச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர் இளையராஜா, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவர் பத்மாவதி, மாவட்ட செயலாளர் அருணாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநாட்டில் ஆண்டிமடத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முந்திரிக்கொட்டை, நெல், எள் கொள்முதல் செய்ய வேண்டும், ஆண்டிமடம் பகுதியில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலையும் மற்றும் முந்திரி பழ தொழிற்சாலையும் அமைக்கவேண்டும், ஆண்டிமடம் வட்டத்தில் 15 ஏக்கருக்கு ஓரிடத்தில் ஆழ்குழாய் அமைத்து பாசன வசதி செய்து தர வேண்டும், மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், ஆண்டிமடத்தில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்களை ஆழப்படுத்தி பாசன வசதியை மேம்படுத்த வேண்டும், உரம், பூச்சி மருந்து இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,
ஒன்றிய பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ரூ.8,700 கோடி உரம் மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் நகை கடன் உடனே வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாத திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 700 ஊதியமும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஆண்டிமடத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கமிட்டி அமைக்கப்பட்டது.
