கரூர், டிச.30: கரூர் ரயில்வே நிலையத்தில் அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர், தவறி விழுந்து இறந்தது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரைச் சேர்ந்தவர் முருகேசன்(46). இவர், கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் தங்கியிருந்து நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கரூர் வரும் நோக்கில், மங்களூரில் இருந்து பாண்டிச்சேரி சென்ற விரைவு ரயிலில் கரூர் புறப்பட்டுள்ளார். அந்த ரயில் கரூர் ரயில்வே நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் வந்து நின்று சிறிது நேரத்தில் திருச்சி நோக்கி புறப்பட்டது. அப்போது, தனது சீட்டில் படுத்திருந்த முருகேசன், கரூர் ரயில்வே நிலையத்தை விட்டு ரயில் புறப்படுவதை அறிந்ததும், அவசர அவசரமாக இறங்க முற்படும் போது, கால் ரயில்படிக்கட்டில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி கிழே விழுந்தவர், 100 மீட்டர் இழுத்துச் சென்று படுகாயமடைந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரூர் ரயில்வே நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
