விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு களமாடு கலைக்கொண்டாட்ட நிகழ்ச்சி; வெற்றி பெற்ற 135 பேருக்கு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை, டிச. 30: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சமூகநீதி கல்லூரி மாணவர், மாணவியர் விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணாக்கர்களுக்கான ‘களமாடு” என்னும் பெயரில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருணா, நேற்று பதக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், திறமை மற்றும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு வலுவான மேடையாக அமைந்திடும் வகையில் பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திடும் திட்டங்களை செல்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 5 சமூகநீதி கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் 2025-2026 ம் கல்வியாண்டில் தங்கி கல்விபயின்று வரும் மாணாக்கர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் மாணாக்கருக்கு உள்ள தனித்திறமையை கண்டறிந்து மாணாக்கர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ‘களமாடு” என்னும் பெயரில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சிகளை நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பி்ன்னர் சமூகநீதி நாளான 17.09. 2025 அன்று அனைத்து கல்லூரி விடுதிகளிலும் துவக்கி வைக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்பதற்கு 23.09.2025 வரை இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி-1, மாணவர் விடுதி-2, மாணவியர் விடுதி-1, மாணவியர் விடுதி-2, மருதன்கோன்விடுதி, சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் 2025-2026 ம் கல்வியாண்டில் தங்கி பயிலும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அக்டோபர் மாதத்தில், மேற்குறிப்பிட்ட ஐந்து கல்லூரி விடுதிகளுக்கும் சென்னை, ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தால் பொறுபாளர்கள் நியமிக்கப்பட்டு ‘களமாடு கலைக்கொண்டாட்டம்” நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கலை பிரிவில் 65 மாணாக்கர்களும் மற்றும் விளையாட்டு பிரிவில் 70 மாணாக்கர்களும் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற 36 மாணவர்கள், 99 மாணவிகள் என மொத்தம் 135 மாணாக்கர்களுக்கும் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாணாக்கர்கள் அனைவரும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவி, துணை ஆட்சியர் பிரியங்கா, தனிவட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: