நாகப்பட்டினத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி புதுக்கோட்டை, திருவள்ளூர் சாம்பியன்

நாகப்பட்டினம், டிச. 30: நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி வளாகத்தில் நடந்து வரும் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஓபன் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் 41வது மாநில அளவில் ஜூனியர் மற்றும் ஓபன் ஆண்கள், பெண்கள் சிலம்பாட்டப் போட்டி, நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி வளாகத்தில் நடந்தது. நேற்று முன்தினம் (28ம்தேதி) நடந்த மாநில அளவிலான போட்டி, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் கேப்டன் பிரதீப் ராஜே, மாநில பொதுச் செயலாளர் விஜய்பாபு, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், முதன்மைப் போட்டி இயக்குனர் நெல்லை சுந்தர், முதன்மை தொழில்நுட்ப இயக்குனர் அழகிரி ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்ற நடுவர்கள் பணியாற்றினர். மேலும் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் 38 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான முழுமையான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட சிலம்பாட்ட சங்கத் தலைவர் ஆல்பர்ட் ஜான், செயலாளர் மதுசூதன் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இரண்டாம் நாள் போட்டி முடிவில், ஜூனியர் பெண்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் 69 புள்ளிகளைப் பெற்று முதல் இடம் பிடித்து, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் 63 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. ஓபன் பெண்கள் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் 29 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் 22 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது. இந்தப் போட்டி, தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையிடையே பரப்பும் வகையிலும், மாநில அளவில் திறமையான வீரர்களை உருவாக்கும் வகையிலும் நடத்தப்பட்டது.

Related Stories: