மயிலாடுதுறை. டிச. 30: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விபிஜி ராம்-ஜி என்று ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விபிஜி ராம்-ஜி என்று ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்தும், திட்டத்திற்கான நிதியை 40 சதவீதம் மாநில அரசு மீது சுமையை ஏற்றியுள்ளதை கண்டித்தும், கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்த 100 நாள் வேலையை சீர்குலைத்து ஒழித்து கட்டும் நோக்கத்தில் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கி விட்டு புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விபிஜி ராம்-ஜி திட்ட மசோதா நகலை போராட்டக்காரர்கள் திடீர் என்று தீ வைத்து எரித்தனர். இதில் நிர்வாகிகள் ராஜேஷ், மணி, செல்வராஜ், இளையராஜா, மாதவன், ஜான்பீட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
