பெரம்பலூர், டிச. 30: தங்கம் விலை இறங்கும்வரை தாலிக் கயிறையே பயன் படுத்துவோம் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெண்கள் மஞ்சள் கயிறுடன் வந்து நூதன விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று (29ம்தேதி) காலை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 11 மணி அளவில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முக சுந்தரம் தலைமையில், 7 பெண்கள் மஞ்சள் ஒன்றைக் கட்டிய மஞ்சள் தாலிக் கயிறுகளை கைகளில் பிடித்து ஏந்தியபடி வந்து நூதனப் போராட்டத்தை நடத்தினர். அப்போது தங்க சண்முக சுந்தரம் பேசும்போது, தங்கம் விலை ரூ.1.05 லட்சத்திற்கு உயர்ந்துவிட்டது. தங்கம் விலை இறங்கும் வரை தாலிக் கயிறையே நாம் பயன்படுத்துவோம். தங்க நகைகளை மட்டுமல்ல தங்கத் தாலியையைக்கூட பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
பங்குச்சந்தை விற்பனையிலிருந்து தங்கத்தை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மஞ்சள் கயிறையே பயன்படுத்துவோம் எனக்கூறினார். கலெக்டர்அலுவலகம் முன்பு மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு களை கைகளில் ஏந்திய பெண்களுடன் வந்து நூதனமாகப் போராட்டம் நடத்தியது சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
