பெரம்பலூர், டிச. 30: சட்ட தன்னார்வலர்கள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் பெரம்பலூரில் புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமாகிய சரண்யா கூறினார்.
புதுடெல்லி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமாகிய பத்மநாபன் ஆலோசனைப்படி, நேற்று காலை 11:30 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பு, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா தலைமை வகித்து பேசியதாவது: சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.
மிகவும் பின்தங்கி இருக்கின்ற பொதுமக்களிடம் சட்ட உதவிமையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் காமராசு, சட்ட தன்னார்வலர்கள் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், எவ்வாறு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் முதன்மை சட்டப் பாதுகாப்பு ஆலோசகர் சிராஜுதீன், சட்டத் தன்னார்வலர்களிடம் பேசும்போது, சட்ட உதவி, யார் யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியல் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத கருத்துக்களையும், சட்ட தன்னார்வலர்களின் பணிகள் மற்றும் நீதிமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் உள்ள தொடர்பையும் தெளிவாக எடுத்து கூறினார்.
