தஞ்சாவூர், டிச 30: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சை திரும்பிய வீரர்களுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பாராட்டி பரிசளித்தார். 63வது தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஹரியானா சண்டிகர், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப் என நாடு முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சேர்ந்த 120 அணிகள் கலந்து கொண்டன.
இதில் தமிழகத்தின் சார்பில் 8 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் தஞ்சை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாநகராட்சி மைதானத்தில் பயிற்சி எடுத்த மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி விளையாட்டு வீரர்களை பாராட்டி சந்தன மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கூறியதாவது: துணை முதலமைச்சரின் முயற்சியால் இன்று விளையாட்டு துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. உலக அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற தேவையான வசதிகளை செய்து தர தயாராக உள்ளது என்றார்.
