நாகப்பட்டினம், டிச. 30: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 261 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலிக்கருவி, 1 நபருக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் கீழ் ரூ.13 ஆயிரம் இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 2 பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் திருமண உதவித்தொகை, 1 நபருக்கு ரூ.ஆயிரத்து 500 கல்வி ஊக்கத்தொகை 1 நபருக்கு ரூ.25 ஆயிரம் இயற்கை மரண நிவாரண உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
டிஆர்ஓ பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
