ஜெயங்கொண்டம், டிச. 30: திருமானூரில் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி பெறுவதற்காக
தஞ்சாவூரில் இருந்து வேளாண் கல்லூரி மாணவிகள் வந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்.சி (விவசாயம்) பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் 12 மாணவிகள் திருமானூர் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி பெறுவதற்காக திருமானூர் வட்டாரத்திற்கு வந்துள்ளனர். தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாணவிகள் திருமானூர் வட்டாரத்தில் 65 நாட்கள் தங்கியிருந்து இப்பயிற்சியை பெற உள்ளனர்.
பயிற்சியின் போது மாணவிகள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து, வேளாண் துறையின் திட்டங்கள் மற்றும் பிற பணிகள் பற்றி தெரிந்து கொள்ள உள்ளனர். மேலும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பற்றி கலந்துரையாடல் நடத்துவார்கள். மேலும் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வேளாண்மை தொழில்நுட்பங்களை செயல்விளக்கங்களாக செய்தும் காண்பிப்பார்கள். இத்துடன் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பினைக் கணக்கெடுத்தல் பணியிலும் இம்மாணவிகள் பயிற்சி எடுத்துக் கொள்ள உள்ளனர்.
