சௌபாக்கியம் அருளும் சௌம்ய நாராயணர்!

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது செளம்ய நாராயணர் திருக்கோயில். வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தின் மூலவர் செளம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் அருள்பாலிக்கின்றனர். ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்த திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.

கோயிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகிறார்கள். மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர், முதல் தளத்தில் சயன கோலத்தில் செளம்யநாராயணர், இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர், மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் என திருமால் நான்கு நிலைகளில் அருள்கிறார். தாயாருக்கு இங்கு தனிச்சந்நதி உள்ளது.

திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறாள். அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருவரும் இருப்பது வித்தியாசமான தரிசனம். பிராகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்றுள்ளது. இத்தலத்தில் திருவருட்பாலிக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் அவர் செளம்யநாராயணர் என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக ஆலயங்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பது வழக்கம். இங்குள்ள உற்சவர் விக்ரகம் தூய்மையான வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது. இந்த விக்ரகத்தை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். திருமால் இரண்யனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த செளம்ய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக காட்சியளிக்கிறார்.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது. இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதால், அவரின் லிங்கத்தினை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். தனி சந்நதியில் ஈசன் லிங்க வடிவில் அருட்பாலிக்கிறார். ஈசனின் சந்நதியை பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்கிறது. ஈசனின் முன் உள்ள சந்நதியில் வேல் தாங்கிய முருகன், சனகாதி முனிவர்கள், நாகர் சிலைகளும் தரிசனமளிக்கின்றன. அவர்களைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை தரிசனம் பெறலாம். அவர் அருகில் ருக்மணி-சத்யபாமா இருவருடன் நர்த்தன கிருஷ்ணன் அழகே வடிவாய் காட்சியளிக்கிறார்.

சில படிகள் ஏறிச் சென்றால் கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்க பெருமாள் சயன கோலத்தில் அற்புத வடிவில் தரிசனம் அளிக்கிறார். ஸ்ரீதேவிபூதேவி பிரதானமாக அங்கம் வகிக்கிறார்கள். மேலும் பிரம்மாவும் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவருடன் காட்சியளிக்கிறார். இம்மூவரும் வீணா கானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். மழலை பாக்கியம் இல்லாதவர்கள், இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், விரைவில் அவர்களுக்கு மழலை வரம் கிடைப்பதாக நம்பிக்கை.

கோபுரத்தின் உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் மற்றும் அதன் பலனை அறிவித்ததால், ஊரைப் பார்த்தவண்ணம் அவரது திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்றழைக்கப்படுகிறது. கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யலாம்.பிராகாரத்தில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இதனை ‘மகாமகக் கிணறு’ என்று அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, பெருமாள் கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்வதாக ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறும்...

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாத தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தம். பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள படிக்கட்டுகளில் அகல்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்த விளக்கினை பக்தர்கள் எடுத்து சென்று அதில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைப்பார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். மேலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறியதும், அடுத்த வருட மாசி தெப்பத் திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக்கரையில் வைத்து வழிபடுவர். அதனை மற்றவர்கள் எடுத்துச் சென்று வழிபடுவார்கள்.

குறிப்பாக திருமணம் நடைபெற வேண்டும் எனும் கோரிக்கையுடன் விளக்கினை கன்னிப் பெண்கள் எடுத்து சென்று வழிபடுகிறார்கள். இங்கு தெப்ப விளக்கு ஏற்றினால், நல்ல மண வாழ்க்கை ஏற்படுவது உறுதி. மேலும் ஏராளமான பக்தர்கள், தெப்ப மண்டபத்தை சுற்றி அன்னதானம் செய்வதும் வழக்கம். ஆலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொகுப்பு: மகி

Related Stories: