பெயரை மாற்ற விரும்பும் மகேந்திரன்

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம், ‘த்ரிகண்டா’. எஸ்விஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா னிவாஸ் தயாரித்துள்ளார். மணி தெலக்குட்டி எழுதி இயக்கியுள்ளார். (மாஸ்டர்) மகேந்திரன், ஸ்ரத்தா தாஸ், சாஹிதி அவான்சா, ‘கல்லூரி’ வினோத், மாஸ்டர் சஞ்சய் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், ஷாஜித் இசை அமைத்துள்ளனர். படம் குறித்து (மாஸ்டர்) மகேந்திரன் கூறுகையில், ‘குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல், ஒரு புனைவுக்கதையாக உருவாகியுள்ள இதில் நடித்திருப்பது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ‘மாஸ்டர்’ படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

சிறுவயதில் தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்தேன். அங்குள்ள ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். தெலுங்கில் ஒரு நல்ல படத்தில் நடிக்கலாம் என்று காத்திருந்தபோது மணி தெலக்குட்டியை சந்தித்தேன். இப்படம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்று சொல்லலாம். திரையுலகம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. ‘நாட்டாமை’ படப்பிடிப்பு நடந்தபோது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் எனக்கு ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று பெயர் சூட்டினார். இனிமேல் என்னை ‘மகேந்திரன்’ என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்றார்.

சாஹிதி அவான்ஷா கூறும்போது, ‘தமிழ் சினிமாதான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இக்கதையை கேட்டபோது எனக்கு எப்படி திரில்லிங்காக இருந்ததோ, அந்த அனுபவம் இப்படத்தை தியேட்டரில் பார்ப்பவர்களுக்கும் கிடைக்கும்’ என்றார்.

Related Stories: