சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, எஸ்.பி.ஹோசிமின் எழுதி இயக்கியுள்ள படம், ‘சுமோ’. நாளை திரைக்கு வரும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், சதீஷ், யோகி பாபு ஆகியோருடன் ஜப்பானை சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் 170 கிலோ உடல் எடை கொண்டவர். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து மிர்ச்சி சிவா கூறுகையில், ‘டோக்கியோவில் இருந்து தவறுதலாக சென்னைக்கு வரும் சுமோ வீரர் என்னை சந்திக்கிறார். இருவரும் விடிவி கணேஷ் நடத்தும் ஓட்டலில் பணியாற்றும்போது, அன்பால் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை’ என்றார். யோஷினோரி தஷிரோ கூறுகையில், ‘எனக்கு தமிழ் தெரியாது. ஒருவர் சொல்ல, அதை கேட்டு உள்வாங்கி நடிக்க தெரியும். 170 கிலோ எடை கொண்ட நான், இந்தியாவில் சல்மான்கான் உள்பட சிலருடன் விளம்பர படங்களில் நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் படம், ‘சுமோ’. குழந்தைகளை கவரும் வகையில் உருவாகியுள்ளது’ என்றார்.