சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ என்ற படம், வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. ‘நாயகன்’ என்ற படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரிஷாவிடம், ‘திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்திருந்த திரிஷா, ‘எனக்கு திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை’ என்றார். அவரை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ‘என்னிடம் எம்.பி ஜான் பிரிட்டாஸ், ‘நீங்கள் ஒரு பிராப்பர் பிராமணர். ராமரை வணங்கும் நீங்கள் எப்படி 2 திருமணங்கள் செய்யலாம்?’ என்று கேட்டார்.
நான் கடவுளை வணங்குவது இல்லை என்பது வேறு விஷயம். பிராப்பர் குடும்பத்தில் இருந்து வருவதற்கும், திருமணத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு நான் பதில் சொன்னேன், `நான் ராமர் இல்லை, ராமர் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் திருமணம் பாக்கி இருக்கிறது’ என்பதாக!’ என்று தமாஷாக பதிலளித்தார்.