தலங்கள் தோறும் நவராத்திரி நாயகியர்

* புதுக்கோட்டை, குறிச்சியில் அருள்கிறாள் அஷ்டதசபுஜ மகாலட்சுமி. நவபாஷாணத்தால் ஆன மூர்த்தினி இவள். கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் இத்தல அம்பிகை அருள்கிறாள். ஒவ்வொரு மாதமும் உலக நன்மைக்காக ஆலயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

* அன்னை ஆதிபராசக்தி நம்புநாயகியம்மன் எனும் பெயருடன் அருளும் தலம் ராமநாதபுரம், தனுஷ்கோடியில் உள்ளது. நவராத்திரியின் போது இத்தேவி நவசக்தி வடிவங்களாக அலங்கரிக்கப்பட்டு கொலுவீற்றருள்கிறாள். இந்த அம்மனுக்கு சார்த்தப்படும் மஞ்சள்காப்பு தீராநோய் தீர்க்கும் மருந்தாகும்.

* நெல்லை, சீவலப்பேரியில் தன் அண்ணன் திருமாலோடு துர்க்காம்பிகை ஒரே கருவறையில் அருள்கிறாள். நவராத்திரியின் எட்டாம் நாள் துர்க்காஷ்டமி அன்று இத்தலத்தில் விமரிசையாக மகாசண்டியாகம் நடைபெறுகிறது.

* கோவை-கிணத்துக்கடவு பாதையில் உள்ளது முப்பெருந்தேவியர் ஆலயம். இங்கு மிகப்பெரிய அளவில் பொம்மைக்கொலு வைத்துநவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். மகாலட்சுமியின் முன் உள்ள மேருவிற்கு அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

* பந்தநல்லூர் வைத்தீஸ்வரன் வழித்தடத்தில் மணல்மேட்டிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது கிடாத்தலைமேடு. மகிஷனை அழித்த தோஷம், துர்க்கைக்கு நீங்கிய தலம் இது. இத்தலம் தோஷநிவர்த்தி தலமாக போற்றப்படுகிறது.

* சென்னை நங்கநல்லூரில் 15 படிகளில் திதிநித்யா தேவிகள் திருவுருவங்கள் இருபுறங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சந்நதியின் இரு புறங்களில் மாதங்கியும், வாராஹியையும் கொண்டு, கருவறையில் மரகதக்கல்லினால் ஆன ராஜராஜேஸ்வரி தேவி தரிசனம் தருகிறாள். இதே கருவறையில், தீயில் மிதந்த தெய்வமணி, பின் தானே ராஜராஜேஸ்வரியாக மாறிய திருவுருவமும் உள்ளது. நவராத்திரி இக்கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

* கன்னியாகுமரியில் பகவதியாய் தேவி அருள்கிறார். நவராத்திரி பத்தாம் நாள் விஜயதசமியன்று அன்னை வெள்ளிக் குதிரையில் ஆரோகணித்து 4 கி.மீ தொலைவிலுள்ள மகாதானபுரத்திற்குச் சென்று பாணாசுர வதம் செய்வாள். அப்போது வழியெங்கும் எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.

* தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள மணல்மேல்குடியில் அம்பிகை, ஜகத்ரட்சகி எனும் திருநாமத்தோடு அருள்கிறாள். நவராத்திரி விழா இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மழலை வரம் தருவதில் நிகரற்றவள் இத்தேவி.

* சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் தாழம்பூரில் த்ரிசக்தி அம்மன் ஆலயம் உள்ளது. இத்தல கருவறையில் லட்சுமி, மூகாம்பிகை, ஞானாம்பிகை மூவரும் திருவருள் பொழிந்து கொண்டிருக்கின்றனர். நவராத்திரி உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.

* மயிலாடுதுறை-திருவாரூர் பாதையில் கூத்தனூரில் சரஸ்வதியை தரிசிக்கலாம். கம்பனுக்காக கிழங்கு விற்கும் பாட்டியாகவும், இடையர் பெண்ணாகவும் நேரில் தரிசனம் தந்த தேவி இவள்.

* சென்னை திருப்போரூரில் வள்ளி-தெய்வானை இருவருக்கும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அவர்களுடைய மாமியாரான பார்வதி தேவிக்கு நடத்தப்படும் இவ்விழா, இத்தலத்தில் மருமகள்களுக்கு நடத்தப்படுவது சிறப்பு.

* தில்லை நடராஜர் ஆலயத்தில் மிகப் பெரிய அளவில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தினம் ஒரு அலங்காரத்தில் அன்னை சிவகாமசுந்தரியை தரிசிக்கலாம்.

* வனதுர்க்கா பரமேஸ்வரி எனும் பெயருடன் பராசக்தி அருளும் தலம், தஞ்சாவூரிலுள்ள கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி இந்த துர்க்கை அருள்பாலிப்பது சிறப்பு. இந்த அன்னைக்கு அர்ச்சனை செய்யும் போது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது பிரமிப்பு.

* காஞ்சிபுரம், புதுப்பட்டினத்தில் அருள்கிறாள் விஜயஜெய சாமுண்டீஸ்வரி. எப்போதும் போர்க்கோலத்தில் காணப்படும் சாமுண்டீஸ்வரி, இத்தலத்தில் தவக்கோலத்தில் அருள்வது ஆச்சர்யம். மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அன்னை இங்கு வந்து தவமிருந்தாளாம்.

* திருத்தணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் பொன்பாடி ரயில்நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது மத்தூர். இங்கே மஹிஷாசுரமர்த்தினியை தரிசிக்கலாம். அமாவாசை தினங்களில் 108 பால் குட அபிஷேகமும், பௌர்ணமி தினங்களில் 108 சங்காபிஷேகத்தோடு நவகலச பூஜைகளும் நடக்கும். இத்தலத்தின் வேப்பிலை கசப்பதில்லை!

* கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது அம்மன்குடி. துர்க்காம்பிகை  எட்டுத் திருக்கரங்களுடன் அருளாட்சி புரியும் தலம் இது. நவகிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கா தேவி கருதப்படுவதால் இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை.

* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் துர்க்காம்பிகை அழகுத் திருக்கோலத்தில் அருள்கிறாள். ராகு தோஷத்தை இந்த

அம்பிகை நிவர்த்தி செய்வதாக ஐதீகம்.

* திருவாரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்தகுடி எனும் ஆனந்தபுரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஆலயத்தில் கல்யாண துர்க்கை அருள்கிறாள். திருமணத்திற்காக காத்திருப்போர் இத்தேவியை தரிசிக்க அவர்களுக்கு உடனே திருமணம் நடக்கிறது.

* காஞ்சிபுரம் காமாட்சியம்மனை நவராத்திரி ஒன்பது நாட்களும் நவராத்திரி கொலு மண்டபத்தில் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் செய்யலாம். அந்த நாட்களில் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தொகுப்பு: ஜெயலட்சுமி

Related Stories: